துபாய் விமான நிலையத்தில் ஒரு வாரமாகத் தேடப்பட்ட பூனை மீட்பு!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டபோது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் காணாமல் போன ‘சுட்டி’ (Chuti) என்ற பூனை, ஒரு வார கால தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி துபாயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த விமானத்தில் கொண்டு செல்லப்பட்டபோதே பூனை காணாமல் போயுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் டுபாய் விமான நிலையக் குழுவினர் மேற்கொண்ட விரிவான தேடுதலின் போது, பயணப் பொதிகளைக் கொண்டு செல்லும் கருவியின் சுரங்கப் பாதைக்குள் பூனை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூனை காணாமல் போனதைத் தொடர்ந்து, அதன் உரிமையாளரான பெண், அதனைத் தேடுவதற்காக சுமார் 28 மணிநேரம் விமான நிலையத்தில் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வார கால முயற்சிக்குப் பின்னர் பூனை கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் உடல்நிலை மற்றும் உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டமை தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

