நாகொட துப்பாக்கிச் சூடு; உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழந்தார்!
களுத்துறை, நாகொட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன்னால் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த உணவக உரிமையாளரின் மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காலை 7.40 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். இதில் உணவகத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த அவரது மனைவி நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று (11) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண், தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மட்டக்களப்பு, வாழைச்சேனையில் வைத்து நேற்று (10) கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

