Monetization ஆசையால் ஆபத்தில் குழந்தைகள்! அரசு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!
சமூக ஊடகங்களில் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு விசேட எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பணமாக்கும் (Monetization) முறைகள் விரிவடைந்துள்ளதைத் தொடர்ந்து, பெற்றோரின் அனுமதியுடனோ அல்லது இல்லாமலோ சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றுவது தீவிரமாக அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதாகவும் அவர்களின் சுட்டித்தனங்களைப் பாராட்டுவதாகவும் கூறி, பல்வேறு நபர்களும் நிறுவனங்களும் இத்தகைய காட்சிகளைத் தங்களது வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான வீடியோக்கள் மற்றும் ‘Vlog’ பதிவுகள் மூலம் சிறுவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகள் வெளிநபர்களுக்குத் தெரியவருவதால், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
மேலும், இணையத்தில் பதிவேற்றப்படும் இத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் ஆபாசக் காட்சிகளை உருவாக்கும் அபாயமும் நிலவுகிறது.
எனவே, இவ்வாறான ஆபத்துகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது பெற்றோரும் பாதுகாவலர்களும் மிகவும் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

