சிறையில் நேரில் சந்தித்து எச்சரிக்கை!!
இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென் கிவிர்,
ஜெருசலேமில் 1996 ஆம் ஆண்டு நடந்த பேருந்து குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஹசான் சலாமாவை சிறையில் நேரில் சந்தித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“இது எனக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை! நான் வாலிபனாக இருந்தபோது, ஜெருசலேமில் உள்ள 18 ஆம் எண் பேருந்து பாதையில் நடந்த கொடூரமான குண்டுவெடிப்புகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடினேன்.
அந்தத் தாக்குதல்களில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்; பல குடும்பங்கள் முற்றாக அழிந்தன.
அன்று வீதிகளில் இறங்கிப் போராடிய அந்தச் சிறுவன் தான் இன்று தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருக்கிறான் என்பதை அவனிடம் கூறி, அந்த அரக்கனின் கண்களை நேருக்கு நேர் பார்த்தேன்.
அவன் பயந்து நடுங்கினான்.அதற்கு அவனிடம் போதுமான காரணமும் இருந்தது.தேசிய பாதுகாப்பு அமைச்சராக, அவனது வாழ்க்கையை நரகமாக்கும் கொள்கையை நான் வழிநடத்தினேன்.
கடவுளின் உதவியால், அடுத்து பாதுகாப்பு அமைச்சராகி, அவரைப் போன்ற கொடூரக் கொலைகார பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வேன்.
மேலும் காசா மற்றும் ஜூடியா, சமாரியாவில் இருந்து (பாலஸ்தீனர்களை) வெளியேற்றும் குடியேற்றக் கொள்கையையும் முன்னெடுப்பேன்.
1996 இல் ஜெருசலேம் பேருந்துகளில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பொறுப்பான ஹசான் சலாமா கைது செய்யப்பட்டு பல ஆயுள் தண்டனைகளை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், பென் கிவிர் வெளியிட்டுள்ள இந்தச் வீடியோ மற்றும் கருத்துக்கள் சர்வதேச அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

