செங்கடலில் மூலோபாய தீவை ஹூதிகள் கைப்பற்றினர்!!
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மேலும் தீவிரம்!
ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி ஆயுதக் குழுவினர் செங்கடல் பகுதியில் அண்மையில் மேற்கொண்டுள்ள அதிரடி முன்னேற்றங்கள்,
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சி.என்.என் (CNN) ஊடகத்தின் சர்வதேச செய்தியாளர் பவுலா ஹான்காக்ஸ் (Paula Hancocks) தகவல் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, செங்கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவொன்றை ஹூதிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமையானது,
ஏற்கனவே அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ச் சூழலால் நிலைகுலைந்து போயுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு மற்றுமொரு பலத்த அடியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூதிகளின் இந்த அதிரடி நகர்வு மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் காரணமாக,
உலகளாவிய ரீதியில் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள எரிசக்தி நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாப் அல்-மந்தேப் (Bab el-Mandeb) நீரிணைக்கு அருகிலுள்ள ஹனிஷ் தீவுகள் (Hanish Islands) உள்ளிட்ட முக்கிய கடல்சார் பகுதிகளைக் குறிவைத்து ஹூதிகள் முன்னேறி வருவதாகவும்,
இது சர்வதேச கடல்வழி எண்ணெய் விநியோகத்தை நேரடியாகப் பாதித்து வருவதாகவும் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

