ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி!!
அமெரிக்காவிற்கு தெஹ்ரான் எச்சரிக்கை; யேமனில் உக்கிரம் பெறும் மோதல்கள்!
அமெரிக்கா தங்கள் மீது புதிய சுற்றுத் தாக்குதல்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும்,
அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையினை அல் ஜசீரா (Al Jazeera) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஈரானியப் புரட்சிகர காவல் படை (IRGC), தமது புதிய ஆயுதத் தளவாடங்களின் வலிமையைக் கண்டு உலகமே வியக்கும் எனக் குறிப்பிட்டுள்ளதோடு, பிராந்திய வான்பரப்பில் அமெரிக்க ட்ரோன் ஒன்று அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவூதி ஆதரவுப் படைகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நிலைமைகள் பிராந்தியத்தில் நீடித்து வரும் சூழலில், ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
யேமனின் அல் ஜவ்ஃப் (Al Jawf) மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் இருதரப்பு மோதல்கள் தீவிரமடைந்துள்ளதுடன், உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் தீவிரப் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கப் பிரஜைகளை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும்,
பிராந்தியத்தை விட்டு வெளியேறுமாறும் அமெரிக்கத் தூதரகங்கள் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன.

