பிரித்தானியாவில் £230,000 நிதி மோசடி!!

பிரித்தானியாவில் £230,000 நிதி மோசடி!!

புஷியைச் சேர்ந்த இலங்கை தம்பதிக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிப்பு!

பிரித்தானியாவின் புஷி (Bushey) பகுதியைச் சேர்ந்த குடும்ப நண்பர்களிடம் சுமார் 230,000 பவுண்டுகள் (Sterling Pounds) நிதி மோசடியில் ஈடுபட்ட மகேந்திரா சர்வேந்திராவுக்கு 6 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

புஷி, ஆல்டன்ஹாம் வீதியைச் (Aldenham Road) சேர்ந்த இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட மகேந்திரா சர்வேந்திரா (52), கடந்த 2022-ஆம் ஆண்டு தனது நண்பர்களுக்கு மறு அடமானம் (Remortgage) செய்து தருவதாகக் கூறிப் பழகியுள்ளார். பின்னர்,

 

அவர்களின் சேமிப்புப் பணத்தை ஒரு கடை மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனம் உள்ளிட்ட போலி வணிகங்களில் முதலீடு செய்யுமாறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

 

பாதிக்கப்பட்டவர்களின் பணம் எந்தவொரு தொழிலிலும் முதலீடு செய்யப்படாமல், மகேந்திரா தனது ஆடம்பர வாழ்க்கைக்காக அதனைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் £10,000 மட்டுமே திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

 

ஹார்ட்போர்ட்ஷயர் காவற்துறையின் (Hertfordshire Constabulary) தீவிர மோசடி மற்றும் இணையக் குற்றப் பிரிவு மேற்கொண்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, மகேந்திரா சர்வேந்திரா மற்றும் அவரது மனைவி மிருணாளினி சர்வேந்திரா (51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

புனித அல்பான்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் (St Albans Crown Court) நடைபெற்ற விசாரணையில், இருவர் மீதும் சுமத்தப்பட்ட மோசடி மற்றும் பணமோசடி (Money Laundering) குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில்:

 

மகேந்திரா சர்வேந்திராவுக்கு 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 

மிருணாளினி சர்வேந்திராவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அது 3 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட (Suspended sentence) தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

குற்றவாளிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளில் இருந்து திருடப்பட்ட பணத்தை மீட்பதற்கான ‘குற்றச் செயல் வருமானச் சட்ட’ (Proceeds of Crime) நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

காவற்துறையின் எச்சரிக்கை:

நிதி சார்ந்த முதலீடுகளைச் செய்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து முழுமையாக ஆராய வேண்டும் என்றும், நிதி ஆலோசகர்கள் அதிகாரப்பூர்வ ‘Financial Conduct Authority’ (FCA) அமைப்பில் பதிவு செய்துள்ளனரா என்பதை www.fca.org.uk இணையதளம் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் காவற்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin