பிரான்ஸ் வங்கித் துறையில் பெரும் அதிர்ச்சி – பிரபல வங்கியில் 118 மில்லியன் யூரோ கொள்ளை!
பிரான்ஸின் பிரிட்டனி பகுதியை தளமாகக் கொண்ட முன்னணி வங்கியான Crédit Mutuel Arkéa, அண்மையில் ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.
போலிப் பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 118 மில்லியன் யூரோ வரை சுருட்டப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிரிப்டோகரன்சி ஆய்வாளர் இந்தத் தாக்குதலை முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, சுருட்டப்பட்ட தொகையைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தனது வாடிக்கையாளர்களுக்கு உறுதிப்படுத்திய வங்கி நிர்வாகம், தற்போதைக்கு நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இந்த தாக்குதலால் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித நிதி இழப்பும் ஏற்படாது என்றும் வங்கி உறுதியளித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் சில வங்கிப் பரிவர்த்தனைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளதாக வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்கியின் மொபைல் செயலியைப் பயன்படுத்த முயன்ற வாடிக்கையாளர்களுக்குக் பிழைச் செய்தி காட்டப்பட்டு அணுகல் தடைபட்டது.
திருடப்பட்ட தொகையின் சரியான அளவை வங்கி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இழப்பீடு குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸின் மத்திய வங்கியான ‘Banque de France’-க்கு இந்தச் சம்பவம் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் கட்டமைப்புச் சீரமைப்புகள் முடிந்தவுடன் அனைத்து வங்கிச் சேவைகளும் விரைவில் இயல்புநிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

