இத்தாலியில் உள்ள பாடசாலைகளில் புர்கா (Burqa) மற்றும் நிகாப் (Niqab) போன்ற முழு முகத்தையும் மூடும் ஆடைகளுக்கு தடை!!
வகுப்பறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும் என்றும் அந்நாட்டின் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அறிவித்துள்ளார்.
தனது ‘பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’ (Brothers of Italy) கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மெலோனி,
இது தொடர்பான சட்டவரைவு விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “மாணவர்கள் முகத்தை மூடாமல் திறந்த முகத்துடனேயே பாடசாலைக்கு வர வேண்டும்.
கலாச்சாரம் என்ற பெயரில் எந்தவொரு பெண் குழந்தையையும் முகத்தை மூடுமாறு கட்டாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், ஒரே வகுப்பறையில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்கள் இருக்கும் போது,
மொழியைக் கற்றுக்கொள்வதிலும் சமூகத்துடன் ஒன்றிணைவதிலும் சிக்கல்கள் ஏற்படுவதால் வகுப்பறைக்கு இத்தனை மாணவர்கள் மட்டுமே இருக்கலாம் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்படும் என்றும்,
இத்தாலிய மொழியைக் கற்றுக்கொள்ள சிரமப்படும் மாணவர்களின் பெற்றோர்களும் கட்டாயம் அம்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

