ஹூதி நிலைகள் மீது சவூதி போர் விமானங்கள் தீவிர வான்வழித் தாக்குதல்!!
24 மணி நேரத்தில் 37 இலக்குகள் தாக்கப்பட்டதாக தகவல்!
யேமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை இலக்கு வைத்து, சவூதி அரேபியாவின் எஃப்-15 (F-15) போர் விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் 37 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, யேமனின் தைஸ் (Taiz) மற்றும் ஹுதைதா (Hodeidah) ஆகிய பகுதிகளில் உள்ள ஹூதி இலக்குகள் மீது இந்தத் தீவிர தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களில் பல ஹூதி போராளிகள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதல் தொடர்பான தகவல்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் களத் தகவல்கள் மற்றும் ஹூதி தரப்பு அறிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே வெளியாகியுள்ளன.
சவூதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகமோ அல்லது சவூதி தலைமையிலான கூட்டுப்படையோ அதிகாரப்பூர்வமாக இந்தத் தாக்குதல் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு விபரங்களை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தேப் (Bab al-Mandab) நீரிணைப் பிராந்தியத்தில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் யேமன் அரசப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில்,
சவூதி தலைமையிலான படைகள் ஹூதிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை இலக்கு வைத்து தொடர் வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.

