8,500 போத்தல் போலி குடிநீர் கைப்பற்றி அழிப்பு: நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் அபராதம்!
போலி இலங்கை தரச்சான்றிதழ் (SLS) முத்திரை மற்றும் போலி பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி போத்தல் குடிநீர் உற்பத்தி செய்து விநியோகித்த அவிசாவளை – சீதாவக்க பகுதியில் உள்ள நிறுவனம் மற்றும் அதன் பணிப்பாளருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட “Lanka Premium” என்ற பெயருக்குப் பதிலாக “Aquachill” என்ற பெயரில் லேபிள் ஒட்டப்பட்ட 8,500 க்கும் மேற்பட்ட குடிநீர் போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
செப்டம்பர் 04 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளருக்கும் 40,000 ரூபா தண்டப்பணம் விதித்த நீதிமன்றம், கைப்பற்றப்பட்ட அனைத்துக் குடிநீர் போத்தல்களையும் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து அழிக்குமாறு உத்தரவிட்டது.
போத்தல் குடிநீர்களைக் கொள்முதல் செய்யும் போது சரியான பிராண்ட் பெயர், தயாரிப்பு திகதி, காலாவதி திகதி மற்றும் உத்தியோகபூர்வ SLS முத்திரையைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

