அமெரிக்காவில் விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் (Miami International Airport) சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
புவேர்ட்டோ ரிகோவிலிருந்து வந்த ‘அமேசான் பிரைம் எயர்’ (Amazon Prime Air) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 767 ரக சரக்கு விமானம், தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தைக் கடந்து அருகில் இருந்த வாகனங்கள் மீது மோதித் தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தி, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை (FAA) மற்றும் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் (NTSB) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

