ஜனநாயகத்தை சீரழிக்கும் அரசாங்கம்; நாமல் ராஜபக்ஷவின் கைதை கண்டிக்கும் ரணில் விக்கிரமசிங்க!
அரசாங்கம் நாட்டின் ஜனநாயகத்தையும் மக்கள் இறையாண்மையையும் சீர்குலைப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், எம்பி நாமல் ராஜபக்ஷவின் கைதைக் கண்டித்த அவர், இதற்கு தனது பலத்த எதிர்ப்பையும் பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவில் உரையாற்றிய அவர், கட்சித் தலைவர் டி.எஸ். சேனநாயக்கவுடன் ஸ்தாபக உறுப்பினராக நாமலினுடைய பாட்டனார் டி.ஏ. ராஜபக்ஷவும் இருந்ததை நினைவுகூர்ந்தார்.
அரசியலமைப்பின் 3வது சரத்தின்படி இறையாண்மை மக்களுக்குரியது. அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் மீதான அடக்குமுறைகள் ஜனநாயகத்தை அச்சுறுத்துகின்றன.
நாடு பாராளுமன்றத்தில் இருந்து நிர்வகிக்கப்படுகிறதா அல்லது பெலவத்தையில் இருந்தா என கேள்வியெழுப்பிய அவர், இறையாண்மையைப் பாதுகாக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு கோரினார்.
வரவிருக்கும் டிசம்பர் மாநாட்டில் புதிய முகங்களுடன் நவீன ஐ.தே.க உருவெடுக்கும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

