ஐந்து கொலைக் குற்றச்சாட்டுகள்!
பிள்ளையான் உள்ளிட்ட இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்சினி அன்னாத்துரை முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை இணையவழி மற்றும் WhatsApp ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கையையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் பிள்ளையான் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதுடன், ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டி-56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

