வீதியால் சென்றவர்களுக்கு வாரி வழங்கியதால் காவல்துறையினர் தலையீடு!

50 யூரோத் தாள்கள் நிரம்பிய பணப்பெட்டியைக் கண்டெடுத்த வீடற்ற நபர்: வீதியால் சென்றவர்களுக்கு வாரி வழங்கியதால் காவல்துறையினர் தலையீடு!

இத்தாலியின் (Italie) ‘பெல்லுனோ’ (Belluno) பகுதியில், வீடற்ற நபரொருவர் 50 யூரோத் தாள்கள் (Billets de 50 euros) நிரம்பிய கைப்பெட்டியொன்றைக் (Valise) கண்டெடுத்து, அப்பணத்தை வீதியால் சென்றவர்களுக்கு விநியோகித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலிய நாளிதழான ‘கொரியரே டெல்லா சேரா’ (Corriere della Sera) வெளியிட்டுள்ள செய்தியின்படி, சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீடற்ற நிலையில் வாழும் ஈராக் (Irak) நாட்டைச் சேர்ந்த ‘ஹைதர்’ (Haider) என்பவரே இவ்வாறு பணத்தை விநியோகித்துள்ளார்.

பெல்லுனோ தொடருந்து நிலையத்திற்கு (Gare de Belluno) அருகில் கூடாரமொன்றில் வசித்து வரும் அவர், கண்டெடுத்த பணத்தாள்களை வீதியில் வீசியுள்ளார்.

ஆரம்பத்தில் இதுவொரு வேடிக்கையான செயல் என வீதியால் சென்றவர்கள் நினைத்த போதிலும், பின்னர் அவை உண்மையான பணத்தாள்கள் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர்.

சிலர் அப்பணத்தை எடுத்துக்கொண்ட நிலையில், ஏனையோர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், எஞ்சியிருந்த 4,390 யூரோக்களை மீட்டனர்.

இதுவரை இந்தப் பணத்திற்கு எவரும் உரிமை கோராத நிலையில், இது யாருடைய பணம் அல்லது எங்கிருந்து வந்தது என்பது மர்மமாகவே தொடர்கின்றது.

காவல்துறையினர் ஹைதரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இந்தப் பணப்பெட்டி அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து அவர் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. “இது தொடர்பில் பல அனுமானங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவருக்கு இந்தப் பணம் எப்படிக் கிடைத்தது என்பதை இதுவரை எங்களால் கண்டறிய முடியவில்லை” என காவல்துறை அதிகாரி மார்க்கோ டால் பொன்ட் (Marco Dal Pont) தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட பணம் அதன் உண்மையான உரிமையாளர் வரும்வரை காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin