பிரான்சின் முன்னாள் பிரதமர் எட்வார் பலதுர் (Edouard Balladur) தனது 97-வது வயதில் காலமானார்!
பிரான்சின் முன்னாள் பிரதமரும், ஐந்தாவது குடியரசின் (Ve République) முக்கிய அரசியல் ஆளுமைகளுள் ஒருவருமான எட்வார் பலதுர் (Édouard Balladur), தனது 97-வது வயதில் நேற்று திங்கட்கிழமை (ஓகஸ்ட் 31) பாரிசில் காலமானார் என அவரது குடும்பத்தினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அவருக்கான திருப்பலி (Messe) நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்கும் வகையில் தனிப்பட்ட முறையில் (Stricte intimité familiale) நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் ‘இஸ்மிர்’ (Izmir) நகரில் பிறந்த பலதுர், 1964-ஆம் ஆண்டில் தனது 35-வது வயதில், ஜெனரல் து கோலின் (Général de Gaulle) கீழ் பிரதமராக இருந்த ஜோர்ஜ் பொம்பிடூவின் (Georges Pompidou) அமைச்சரவையில் இணைந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
பின்னர் 1968-ஆம் ஆண்டில், ஜாக் சிராக்குடன் (Jacques Chirac) இணைந்து ‘கிரெனெல் உடன்படிக்கைகளில்’ (Accords de Grenelle) முக்கிய பங்காற்றினார்.
தொடர்ந்து தனது அரசியல் வழிகாட்டியான ஜோர்ஜ் பொம்பிடூவுடன் அதிபர் மாளிகைக்குச் (Élysée) சென்ற அவர், துணைப் பொதுச் செயலாளராகவும் பின்னர் அதிபர் மாளிகையின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
சிறிது காலம் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த அவரை, 1980-களில் RPR கட்சியின் தலைவராக இருந்த ஜாக் சிராக் மீண்டும் தீவிர அரசியலுக்கு அழைத்து வந்தார்.
1993-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் வலதுசாரிகள் (Droite) பெற்ற பாரிய வெற்றியைத் தொடர்ந்து, மக்களிடையே பெரும் செல்வாக்கு மிக்க பிரதமராக எட்வார்ட் பல்லாதுர் பதவியேற்றார். இந்த அதீத மக்கள் ஆதரவின் உந்துதலால், 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் (Élection présidentielle) அவர் வேட்பாளராகக் களமிறங்கினார்.
ஆரம்பகட்டக் கருத்துக் கணிப்புகளில் முதலிடத்தில் இருந்த போதிலும், காலப்போக்கில் அவரது செல்வாக்குச் சரிவடைந்தது.
இறுதியில், அவரது 30 கால நண்பரான ஜாக் சிராக், சோசலிசக் கட்சியின் வேட்பாளரான லியோனல் ஜோஸ்பினை (Lionel Jospin) வீழ்த்தி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தத் தோல்வி பல்லாதுரின் அரசியல் அபிலாஷைகளை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன், இரு நண்பர்களுக்கிடையிலான இந்தப் போட்டி பிரான்சின் வலதுசாரி அரசியலில் நீண்டகாலப் பிளவையும் ஏற்படுத்தியது.
அரசியலிலிருந்து முழுமையாக ஓய்வுபெற்ற பின்னர், 1995 அதிபர் தேர்தலுக்காகப் பாகிஸ்தானுடனான ஆயுத ஒப்பந்தங்கள் ஊடாகச் சட்டவிரோதமாக நிதியுதவி (Financement occulte) பெற்றதாக அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், நீண்ட விசாரணைகளின் முடிவில், 2021-ஆம் ஆண்டில் குடியரசு நீதிமன்றத்தால் (Cour de justice de la République) அவர் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

