வடக்கு பிரான்ஸில் உள்ள கிராவ்லைன்ஸ் (Gravelines) அணு மின் நிலையத்தில், கடலில் இருந்து பெருமளவில் வந்த ஜெல்லி மீன்கள் கூட்டம் காரணமாக 3 அணு உலைகள் தானாகவே நிறுத்தப்பட்டுள்ளன.
கடல் நீரை குளிர்விப்பதற்காக பயன்படுத்தும் பகுதிக்குள் ஜெல்லி மீன்கள் புகுந்து, தண்ணீர் உள்ளே வரும் இடத்தில் இருக்கும் பில்டர் டிரம்களை அடைத்துக் கொண்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக 2, 3 மற்றும் 4-ம் எண் உலைகள் தானாகவே அணைக்கப்பட்டன.
இந்த மின் நிலையத்தில் மொத்தம் 6 உலைகள் உள்ளன, ஒவ்வொன்றும் சுமார் 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடியது. இதில் 1-ம் எண் உலை 50% அளவில் மட்டுமே இயங்குகிறது, 5-ம் எண் உலை ஏற்கனவே பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. 6-ம் எண் உலை மட்டும் வழக்கம் போல் இயங்கி வருகிறது.
ஜெல்லி மீன்கள் அணு உலைக்குள் நுழையவில்லை. குளிர்விப்பு அமைப்பை பாதுகாக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை இயக்கும் EDF நிறுவனம், இதனால் மின் நிலையத்திற்கோ, ஊழியர்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளது. கடலில் உள்ள ஜெல்லி மீன்களை குறைக்க மீன்பிடி படகுகள் அனுப்பப்பட்டுள்ளன, உள்ளே சிக்கியவற்றை வெளியேற்ற வாக்யூம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதே போன்ற சம்பவம் கடந்த ஆகஸ்ட் 2025-லும் இதே மின் நிலையத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஜெல்லி மீன் கூட்டத்தை முன்கூட்டியே கண்டறிய கேமராக்கள் உள்ளிட்ட கண்காணிப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தன.
இது ஒரு அணு விபத்து அல்ல, தொழில்நுட்ப ரீதியான தற்காலிக இடையூறாக மட்டுமே கருதப்படுகிறது.
படம்: கவனத்தை ஈர்ப்பதற்காக AI மூலம் உருவாக்கப்பட்ட மாதிரி படம்.

