பழைய தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் அடையாள அட்டை

இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக, எதிர்வரும் சில ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டுக்குள் முதலாவது டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டை முறைமையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சுமார் இரண்டு வருட காலப்பகுதிக்குள் நாட்டில் உள்ள சுமார் 17 மில்லியன் மக்களையும் தற்போது பயன்படுத்தப்படும் பழைய அடையாள அட்டை முறையிலிருந்து புதிய டிஜிட்டல் அடையாள முறைமைக்கு மாற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வரும் நிலையில், இந்த புதிய அடையாள அட்டை முறைமை நடைமுறைக்கு வந்தால் பொதுமக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடைமுறைகளிலும் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

Recommended For You

About the Author: admin