பேராதனை – பதுளை – செங்கலடி வீதியின் ஹாலிஎல முதல் பதுளை வரையிலான பகுதியை புனரமைப்பதற்காக அரசாங்கம் 600 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதுடன், இப்பணிகளை 6 மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது.
நேற்று (11) ஹாலிஎல நகரம் முதல் பதுளை வரையிலான வீதியை கள விஜயம் செய்து பார்வையிட்ட பின்னர், இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க இதனைத் தெரிவித்தார்.
வெறும் வீதி மறுசீரமைப்போடு நிறுத்திக்கொள்ளாமல், பொதுமக்களுக்கு அதிகபட்ச சௌகரியத்தை வழங்குவதோடு நகரத்தின் அழகையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என பிரதி அமைச்சர் கூறினார்.
விபத்துக்கள் அதிகம் நிகழும் பகுதியாக அடையாளங்காணப்பட்ட இப்பாதையில், பாதசாரிகளுக்கான நடைபாதைகள், கடவைகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
எல்ல மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களுக்கு பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் வீதியையும் அதனைச் சுற்றியுள்ள சூழலையும் அழகுபடுத்துவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
இவ்விரு நகரங்களும் சமமான பலனைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் நகர அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும்.
இந்த கள விஜயத்தின் போது, வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், பொறியியலாளர் மற்றும் ஹாலிஎல பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த வருஷமான ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இயற்கை சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், புனரமைப்பு தேவைப்படும் முக்கிய இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, கவர்ச்சிகரமான முறையில் கட்டுமானப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஹென்னாயக்க குறிப்பிட்டார்.
பதுளை மாவட்டத்திற்காக வீதி அபிவிருத்தி அமைச்சு கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், இந்த 600 மில்லியன் ரூபாய் முதலீடு பொதுமக்களின் நலனுக்காக திறம்பட பயன்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்

