புதுடெல்லி: நாடு முழுவதும் புழக்கத்தில் பற்றாக்குறையாக உள்ள ரூ. 10 மற்றும் ரூ. 20 மதிப்பிலான நோட்டுகளில் தலா 100 கோடி நோட்டுகள் பிளாஸ்டிக் நோட்டுகளாக அச்சடிக்கப்பட்டு களச் சோதனைக்காகவும், சோதனைக்குப் பிறகு வழக்கமான பயன்பாட்டிற்காகவும் அச்சிடப்படும் என்று மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
அதற்காக காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் நோட்டுகளைக் கொண்டுவரும் திட்டம் ஏதுமில்லை என்றும், இவை இரண்டும் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருக்கும். சர்வதேச ஆய்வுகளின்படி காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் ஆயுட்காலம் அதிகம்.
தற்போது பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகம் செய்யும் பணி ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் பிளாஸ்டிக் நோட்டுகளுக்கான மூலப்பொருட்களைப் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்பதிலும், சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் மூலப்பொருட்களுடன் இதற்கு எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது என்பதிலும் ஒன்றிய அரசும் ரிசர்வ் வங்கியும் உறுதியாக இருப்பதால், புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ரூபாய் நோட்டுகள் என்பவை பாரம்பரியமான பருத்தி-காகிதத்திற்குப் பதிலாக, ‘பையாக்சியலி ஓரியண்டட் பாலிப்ரோப்பிலீன்’ எனப்படும் சிறப்பு வகை பிளாஸ்டிக் பொருளால் தயாரிக்கப்படும் நவீன ரூபாய் நோட்டுகள் ஆகும்.
* அவை 2.5 முதல் 4 மடங்கு அதிக காலம் நீடிக்கும். நீர் மற்றும் அழுக்கை எதிர்க்கும். எளிதில் கள்ள நோட்டு தயாரிக்க முடியாது.
* உலக அளவில் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ருமேனியா, புருனே, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பிளாஸ்டிக் நோட்டுகளுக்கு மாறி உள்ளன.

