முல்லை மண்ணின் உயிர் காத்த மருத்துவ மகுடம்: வைத்தியக்கலாநிதி வீரகத்திப்பிள்ளை சண்முகராஜாவிற்கு பிரமாண்ட கௌரவிப்பு.!
“மருத்துவ சேவை என்பது ஒரு தொழில் அல்ல; அது மனித உயிரைக் காக்கும் புனிதப் பொறுப்பு” என்பதற்கு இலக்கணமாகத் திகழும் முல்லைத்தீவின் சொத்து, வைத்தியக்கலாநிதி வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா அவர்கள், முல்லைத்தீவு மண்ணில் ‘தேசத்தின் மருத்துவ மகுடம்’ என்னும் மகத்தான விருதினால் பிரமாண்டமாகக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
1968 ஆம் ஆண்டு ஆடி மாதம் 11 ஆம் நாள், முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் வீரகத்திப்பிள்ளை – கனகம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
முள்ளிவளை வித்தியானந்தாக்கல்லூரியின் மாணவத்தலைவனாக விளங்கி, அங்கிருந்து பல்கலைக்கழகம் செல்லும் தன் கனவை நனவாக்கினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பயின்று மருத்துவரானார்.
“குண்டு மழைக்குள்ளும், எந்த அடிப்படை வசதிகளும் அற்ற சூழலிலும் தன் உயிரைப் பணையம் வைத்து மக்களின் உயிர் காத்த உன்னத மனிதர்.”
1991 ஆம் ஆண்டு ஒரு முதலுதவியாளனாக இணைந்து தமிழர்களின் விடுதலைப்பயணத்தில் மருத்துவப் பணியைத் தொடங்கினார்.
வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றி, பல்லாயிரக்கணக்கான #கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிரசவம் பார்த்து, கைதேர்ந்த மருத்துவராகப் போற்றப்பட்டார்.
#போரின் இறுக்கமான காலகட்டங்களில், #குண்டு மழைகளுக்கு மத்தியில், எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற இடங்களில் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு, வீழ்ந்த வேங்கைகளுக்கும் பொதுமக்களுக்கும் இரவு பகல் பாராது உயிர்பிச்சை அளித்தார்.
இறுதிப்போரின் உச்சத்தில் #மக்கள் சேவை செய்த காரணத்தினால் அதிகார வர்க்கத்தினால் #கைது செய்யப்பட்டார்.
எல்லாம் இழந்த பின்னரும், எஞ்சியிருக்கும் தனது அனுபவமும் மருத்துவப் படிப்பும் மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற துடிப்புடன் மீண்டும் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் நோக்கித் தனது காலடிகளை எடுத்து வைத்தார்.
அறிவும், அனுபவமும், மனிதநேயமும் கொண்டு, பலரின் வாழ்வில் நம்பிக்கையின் ஒளியை ஏற்றியுள்ள இவரது புனிதப் பயணம் எண்ணற்ற மக்களின் இதயங்களில் #அழியாத இடத்தைப் பெற்றுள்ளது.
தன் வாழ்வையே மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த இந்த #முல்லை மண்ணின் மைந்தனுக்கு, முல்லைத்தீவு மக்கள் ஒன்றுதிரண்டு ‘தேசத்தின் மருத்துவ மகுடம்’ விருது வழங்கி தங்களின் நன்றியையும் அன்பையும் பிரமாண்டமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
“மக்களின் இதயங்களில் வாழும் மருத்துவர் சண்முகராஜா அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் மரியாதைகளும்!”

