குருந்தூர்மலையில் சைவ கோவில் இருந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை என தொல்லியல் திணைக்களம் புத்தசாசன அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றது
அதாவது அங்குள்ள ஆதி ஐயனார் கோவிலை சிதைத்து சட்டவிரோதமாக நீதிமன்ற உத்தரவுகளை மீறி குருந்தி ராஜமஹா விகாரை கட்டப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அங்கு சைவ கோவில் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தொல்லியல் திணைக்களம் எழுத்தில் சொல்லியிருக்கின்றது
அதே போல குறித்த நிலப்பரப்பானது வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த தலத்திற்கான சான்றுகளைக் கொண்ட இடம் எனவும் தங்கள் கடிதத்தில் தொல்லியல் திணைக்களம் பதிவு செய்து இருக்கின்றது
விசேடமாக பிக்குகளால் சேதமாக்கப்பட்டுள்ள சைவ ஆலயத்தை புனரமைக்க சிந்திப்பது அல்லது புதிதாக உருவாக்க முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் எழுத்தில் அறிவித்திருக்கின்றார்கள்
உண்மையில் குருந்தூர் மலை தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பு என்பதுடன் அங்குள்ள தெய்வங்களை அக் கிராம மக்கள் பூர்வீகமாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள்
விசேடமாக அங்குள்ள எச்சங்களும், சிதைவுகளும் வரலாற்று ரீதியாக 2,300 ஆண்டுகாலம் பழமை வாய்ந்தது என பேராசிரியர் பத்மநாதன் உட்பட்ட வரலாற்றுத்துறை நிபுணர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள்
குறித்த பகுதியுள்ள தமிழ் வரிவடிவ எழுத்துக்களைக் கொண்டு குறித்த நிலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கொள்ளத் தக்கது எனவும் பேராசிரியர் பத்மநாதன் அறிவித்து இருக்கின்றார்
அதே நேரம் குறித்த மலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுமுகம் தாரலிங்கம் என வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் உறுதிப்படுத்துகின்றார்
அதே போல ஆங்கிலேய ஆய்வாளர்களும் குருந்தூர் மலையில் ஆவுடையார் (லிங்கத்தின் அடிப்பாகம்), அதனருகில் கை கூப்பிய சிலை, உடைந்த நந்தி சிலை, செங்கல்லாலான பழங்கால கிணறு உட்பட்ட சான்றுகள் இருந்ததாக பதிவு செய்திருக்கின்றார்கள்.
இது மாத்திரமின்றி, கலிங்க மாகோன் என்ற மன்னன் ஆட்சி செய்த காலத்தில் குருந்தூர் மலை படைத்தளமாக இருந்ததாக சூளவம்சம் சொல்லுகின்றது.
அதனடிப்படையில், வீரசைவத்தை வழிபட்ட கலிங்க மாகோன் காலத்தில் சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றார்கள்
அதாவது, தமிழர்கள் அந்த மலையில் சிவன் மற்றும் ஐயனார் ஆலயங்களை வைத்து பாரம்பரியமாக பல நூறு ஆண்டுகளாக வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள் என்பதற்கும் போதிய வரலாற்று ஆதாரங்கள் உண்டு.
ஆனால் 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் அத்துமீறி நுழைந்த கல்கமூவ சாந்தபோதி தேரர் 2020 ஆண்டு முதல் நீதிமன்ற கட்டளைகளை மீறி இராணுவத்தின் துணையுடன் சட்டவிரோதமாக குருந்தூர் மலை விகாரையை நிர்மாணித்து இருக்கின்றார்
அதே போல குறித்த சட்டவிரோத விகாரை சூழலில் இராணுவத்தினரின் உதவியுடன் 229 ஏக்கர் வளமான நிலப்பரப்பையும் கல்கமூவ சாந்தபோதி தேரர் ஆக்கிரமித்துள்ளார்
கல்கமூவ சாந்தபோதி தேரர் ஊடக பல்வேறு தளங்களில் ஏற்பட்ட அழுத்தம், மரண அச்சுறுத்தல்கள், இராணுவப் புலனாய்வுதுறையினரின் கண்காணிப்பு காரணமாக முல்லைத்தீவு நீதிபதி திரு சரவணராஜா அவர்கள் பதவி துறந்து இலங்கை தீவை விட்டே வெளியேறி இருந்தார்
இது மாத்திரமின்றி பிக்கு ஆக்கிரமித்துள்ள தங்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்யமுற்பட்ட தமிழ் பொதுமக்களை கூட சில மாதங்களுக்கு முன் பொலிஸில் பிடித்து கொடுத்து சிறையில் அடைத்து இருந்தார்
இதன் தொடர்ச்சியாக தற்போது தொல்லியல் திணைக்களம் அங்கு எந்த சைவ ஆலயங்களும் இருக்கவில்லை என எழுத்தில் அறிவித்திருக்கின்றது
பாராளமன்றத்தில் வெடுக்குநாறி மலையை பௌத்த மத நிலமாக வர்த்தமானி ஊடக ஜேவிபி அறிவித்திருக்கும் நிலையில் தற்போது தொல்லியல் திணைக்களம் ஊடக குருந்தூர்மலையை முழுமையான பௌத்த மத நிலமாக அடையாளப்படுத்தி சைவ மத தலங்களுக்கு இடமில்லை என எழுத்தில் அறிவித்திருக்கின்றார்கள்
அதாவது பலாலி விமான நிலையில் நடராஜர் சிலை வைத்தால் இன நல்லிணக்கத்திற்கு பாதகம் என சொல்லும் ஜேவிபி சைவ ஆலயத்தை அழித்து அதன் மேல் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை அங்கீகரித்து அங்கு ஒருபோதும் சைவ கோவில் இருக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் ஊடக அறிவித்திருக்கின்றார்கள்


