தவிசாளரின் ஒலிப்பதிவு விவகாரம்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன்

கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் ஒலிப்பதிவு விவகாரம்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை வெளியிட்டதாகக் கூறி, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று (27.05.2026) பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

 

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேச சபை தவிசாளரும், பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

குறித்த ஒலிப்பதிவை தவிசாளரே பிரதேச சபை உறுப்பினர்கள் அடங்கிய வாட்சப் குழுவொன்றில் பகிர்ந்ததாகவும், பின்னர் அது உறுப்பினர்கள் மூலம் ஊடகவியலாளர்களிடம் சென்றதாகவும் தெரியவருகிறது.

 

இதனைத் தொடர்ந்து அந்த ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியதுடன், செயலாளர் இடமாற்றம் தொடர்பான சர்ச்சை குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதனால் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கும், அவர் சார்ந்துள்ள தேசிய மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதேசத்தில் கடுமையான எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் குறித்த ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாக தெரிவித்து கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் மீது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

 

அதற்கமைய, பொலிஸாரின் அழைப்பை ஏற்று இன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, முறைப்பாட்டாளரான கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரையும் பொலிஸார் விசாரணைக்காக அழைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தான் தற்போது கொழும்பில் இருப்பதால் பொலிஸ் நிலையத்திற்கு வர முடியாது என தவிசாளர் தெரிவித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

 

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 29.05.2026 அன்று காலை 10 மணிக்கு இருதரப்பினரையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அழைப்பு..

Recommended For You

About the Author: admin