இன்று செவ்வாய்க்கிழமை காலை, Paris-இன் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தினால் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
Paris-இன் வடக்குப் புறநகர்ப் பகுதியான Stains-இல் அமைந்துள்ள Rue du Moutier என்னுமிடத்தில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்த தொடருந்துப் பாதைகளுக்கான மின் இணைப்பைத் துண்டிக்குமாறு தீயணைப்புப் படையினர் அறிவுறுத்தினர். இதனால் தொடருந்துச் சேவைகள் முற்றிலுமாக முடங்கின.
RER B: Aulnay-sous-Bois மற்றும் La Plaine – Stade de France இடையேயான சேவை நிறுத்தப்பட்டது.
Transilien K: Paris Gare du Nord மற்றும் Mitry – Claye இடையேயான சேவை பாதிக்கப்பட்டது.
TER Hauts-de-France: Paris மற்றும் Laon நகரங்களுக்கு இடையிலான தொடருந்துச் சேவை நிறுத்தப்பட்டது.
RER D: இவ்வழித்தடத்தில் நேரடியாகத் தீவிபத்து நிகழவில்லை என்றாலும், RER B வழித்தடத்துடன் இணையும் பகுதியில் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டதால் தொடருந்துகள் காலதாமதமாக இயங்கின.
இன்று காலை 9 மணியளவில், RER B, K, TER மற்றும் RER D ஆகிய வழித்தடங்களில் போக்குவரத்துப் படிப்படியாகச் சீரடைந்தது. ஆயினும், Tram T11 மின்னுந்து வழித்தடத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் தாக்கத்தால், இன்று நண்பகல் வரை அவ்வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியிருந்தது

