ஐரோப்பா முழுவதும் பரவும் போலி வெடிகுண்டு மிரட்டல்கள்:
விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கம், போர் விமானங்கள் பாதுகாப்புப் பணி – தீவிர எச்சரிக்கை!
ஐரோப்பிய வான்பரப்பில் தொடர்ச்சியாகப் பல பயணிகள் விமானங்களை இலக்கு வைத்து விடுக்கப்பட்டு வரும் போலி வெடிகுண்டு மிரட்டல்கள்
(Bomb Threat Hoaxes), சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறையினர் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த சில நாட்களாகப் பிரித்தானியா, இத்தாலி, பிரான்ஸ், போலந்து, பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க்,
கிரீஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் இயக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் இவ்வாறான மிரட்டல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு சோதனைகளின் முடிவில் இவை அனைத்தும் ‘தீங்கிழைக்கும் போலி மிரட்டல்கள்’ (Malicious Hoaxes) என உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், சர்வதேச அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அச்சுறுத்தலுக்குள்ளான சிவிலியன் விமானங்களைப் பாதுகாப்பாக வழிநடத்த இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப்படைப் போர் விமானங்கள் அவசரமாக வானில் பறக்கவிடப்பட்டன.
டப்ளினில் இருந்து ரோம் நோக்கிப் பயணித்த ஏர் லிங்கஸ் (Aer Lingus) விமானம், பிரெஞ்சுப் போர் விமானங்களின் பாதுகாப்புடன் பாரிஸுக்கு மேற்கே உள்ள எவ்ரோக்ஸ் (Evreux) இராணுவ விமானத் தளத்திற்குத் திருப்பி விடப்பட்டுத் தரையிறக்கப்பட்டது.
லண்டன் ஸ்டான்ஸ்டெட்டிலிருந்து பல்கேரியாவின் சோபியா நோக்கிச் சென்ற ரயான் ஏர் (Ryanair) விமானம் ப்ளோவ்டிவ் (Plovdiv) விமான நிலையத்திற்கும், மிலனிலிருந்து வார்சோ சென்ற விஸ் ஏர் (Wizz Air) விமானம் வியன்னாவிற்கும் திருப்பி விடப்பட்டன.
ஹெல்சிங்கியிலிருந்து ரோம் சென்ற ஃபின்னேர் (Finnair) விமானம் இத்தாலியப் போர் விமானங்கள் புடைசூழ ரோமின் லியோனார்டோ டா வின்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சிறப்புப் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்தப்பட்ட தீவிர சோதனைகளில், எந்தவொரு விமானத்திலிருந்தும் ஆபத்தான வெடிபொருட்களோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களோ கண்டறியப்படவில்லை.
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்களுக்கு அநாமதேய மின்னஞ்சல் முகவரிகள் ஊடாகவே இந்த மிரட்டல்கள் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டுள்ளன. ரோமில் உள்ள விமான நிலைய நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட சில மிரட்டல் செய்திகளில், தீவிர வலதுசாரி மற்றும் பெண்கள் வெறுப்பு (Misogynistic) கருத்துக்கள் அடங்கிய வாசகங்கள் காணப்பட்டதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்குவரத்து ஆணையாளர் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் இது பற்றிக் குறிப்பிடுகையில்,
பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பொதுமக்களை அச்சுறுத்தவும் பொருளாதார ரீதியான இடையூறுகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்ட ‘கலப்பு அச்சுறுத்தல்’
உத்திகளாக (Hybrid Attacks) இவை இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும், இந்த தொடர் மிரட்டல்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

