ஐரோப்பாவின் 20 மிகப்பெரிய விமான நிறுவனங்களின் நம்பகத்தன்மை, இழப்பீட்டு கோரிக்கைகளைக் கையாளுதல் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை மதிப்பிட்டு நடத்தப்பட்ட புதிய ஆய்வில், ஏர் பிரான்ஸ் நிறுவனம் 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.
விமானப் பயணிகளுக்கான நுகர்வோர் உரிமைகள் அமைப்பான ‘ஃப்ளைட்ரைட் இந்தத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் மூன்று பிரிவுகளின் கீழ் 1 முதல் 5 வரையிலான புள்ளிகள் வழங்கப்பட்டு, பின்னர் ஒட்டுமொத்த மதிப்பீடு கணக்கிடப்பட்டது.
இந்தத் தரவரிசையில் ஏர் லிங்கஸ், ஏர் யூரோப்பா மற்றும் வூலிங் ஆகிய நிறுவனங்கள் முறையே 1.79, 1.93 மற்றும் 2.06 புள்ளிகளுடன் மிக மோசமான செயல்திறன் கொண்ட முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. ரைன்ஏர் நிறுவனம் கீழிருந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதைத் தொடர்ந்து விஸ் ஏர் , ஈஸிஜெட் மற்றும் லுஃப்தான்சா ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
ஏர் பிரான்ஸ் நிறுவனம் 5-க்கு 2.47 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்தமாக 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பிரெஞ்சு தேசிய விமான நிறுவனத்தின் மிக மோசமான வீழ்ச்சி அதன் ‘நம்பகத்தன்மை’ பிரிவிலேயே ஏற்பட்டுள்ளது.
இப்பிரிவில் அது வெறும் 1.5 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இது கே.எல்.எம் மற்றும் லுஃப்தான்சா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் தரவரிசையிலேயே வழங்கப்பட்ட மிகக் குறைந்த புள்ளியாகும்.
விமானத் தாமதங்கள் மற்றும் ரத்து செய்யப்படுதல்களைக் கணக்கில் கொண்டே இந்த நம்பகத்தன்மைப் புள்ளி வழங்கப்படுகிறது.
ஏர் பிரான்ஸின் இந்த நம்பகத்தன்மைப் புள்ளியானது ரைன்ஏர், விஸ் ஏர் மற்றும் ஈஸிஜெட் போன்ற பல குறைந்த கட்டண போட்டி விமான நிறுவனங்களை விடக் குறைவாகும். இது ஐரோப்பாவின் முன்னணி முழுச் சேவை விமான நிறுவனமாக இருந்தபோதிலும்,
விமானங்களைச் சரியான நேரத்திற்கு இயக்குவதிலும், ரத்து செய்யப்படுவதைத் தடுப்பதிலும் ஏர் பிரான்ஸ் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இருப்பினும், இழப்பீட்டு கோரிக்கைகளைக் கையாளுவதில் ஏர் பிரான்ஸ் மற்ற அனைத்து நிறுவனங்களையும் விட சிறப்பாகச் செயல்பட்டு தாமதம் மற்றும் ரத்துக்கான இழப்பீடுகளை மிக வேகமாக வழங்கியதற்காக இந்த ஆய்வில் மிக உயர்ந்த புள்ளியைப் பெற்றுள்ளது.
இந்தத் தரவரிசைப் பட்டியலின் டாப் இடத்தில், ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் 3.04 புள்ளிகளுடன் ஐரோப்பாவின்
மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட விமான நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யூரோவிங்ஸ் மற்றும் ஏர்பால்டிக் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான விமானத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் டிக்கெட் கட்டணம், பயண வசதிகள் அல்லது விமானத்தின் உள்ளே வழங்கப்படும் சேவைகள் போன்ற பிற காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

