சமூக வலைத்தளங்களில் உருவான காதல் தொடர்பை நம்பிய இலங்கை யுவதி ஒருவர், ஆன்லைன் மோசடியில் சிக்கி சுமார் 5 இலட்சம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகநூல் (Facebook) ஊடாக சீனாவைச் சேர்ந்ததாக தன்னை அறிமுகப்படுத்திய இளைஞர் ஒருவருடன் யுவதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
குறுகிய காலத்திலேயே இந்த நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
பின்னர், தன்னை திருமணம் செய்ய இலங்கைக்கு வரவுள்ளதாகவும், 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அனுப்பியுள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசா, விமான டிக்கெட் நகல்கள், பரிசுப் பெட்டிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் அனுப்பி யுவதியின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.
அதன் பின்னர், “சுங்கத் துறையில் சிக்கியுள்ள பரிசுப் பொருட்களை விடுவிக்க 5 இலட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்” எனக் கூறி பணம் கோரியுள்ளார்.
இதனை நம்பிய யுவதியும் அவரது குடும்பத்தினரும், தங்களிடம் இருந்த பணத்துடன் நகைகளையும் அடகு வைத்து சுமார் 5 இலட்சம் ரூபாயை குறித்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால் பணம் அனுப்பப்பட்ட உடனேயே அந்த நபரின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டதுடன், அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால் தாங்கள் மோசடிக்குள்ளாகியுள்ளதை உணர்ந்த குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகும் நபர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும், பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிர்வதற்கு முன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

