அமெரிக்காவின் ஏபிஎஸ் (ABS) செய்தித் தொலைக்காட்சிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பேட்டியில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் எந்தவொரு போர்க்குற்றத்தையும் இழைக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நவீன வரலாற்றில் நடந்த மற்ற போர்களுடன் ஒப்பிடுகையில், காசா பகுதியில் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் உயிரிழப்புகள் மிகக் குறைவானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, காசாவில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் அபத்தமான மற்றும் ஆதாரமற்ற பேச்சுகள் என்று அவர் நிராகரித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள நெதன்யாகு,
இஸ்ரேல் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்துவதற்கு அந்த நீதிமன்றத்திற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அந்த நீதிமன்றத்தை ஊழல் நிறைந்தது என்றும் அவர் சாடியுள்ளார்.
பாலஸ்தீனர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் ஆயுதமேந்திய இயக்கத்தின் உறுப்பினர்களைக் குறிவைப்பதற்கு முன்பாக, காசாவில் உள்ள பொதுமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
பாதிப்பு ஏற்படக்கூடிய ஆபத்தான பகுதிகளை விட்டு மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக,
காசா பகுதி மக்களுக்கு லட்சக்கணக்கான குறுஞ்செய்திகளையும் தொலைபேசி அழைப்புகளையும் இஸ்ரேல் ராணுவம் விடுத்திருந்ததாக நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலுக்கு இனப்படுகொலை செய்யும் எண்ணம் இருந்திருந்தால், பொதுமக்களைக் காப்பாற்ற இத்தகைய எச்சரிக்கை செய்திகளை அனுப்பியிருக்க மாட்டோம் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
மாறாக, பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அனுமதிக்க மறுத்து தடுத்த அந்த இயக்கமே இனப்படுகொலைக்கான உண்மையான நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்

