உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவா (Darya Shipacheva)-க்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து மொஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனுக்கு பணப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், தர்யா ஷிபச்சேவா 2025 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணையின்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் செய்தியளித்து வந்த அவர், ரஷ்யாவின் பல முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
ரஷ்யா–உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவில் ஊடகக் கட்டுப்பாடுகள் மற்றும் தணிக்கைச் சட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
‘
பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு’ (CPJ) வெளியிட்ட தகவலின்படி, ரஷ்யாவில் இதுவரை 29-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தங்களின் செய்தியளித்தல் மற்றும் ஊடகப் பணிகளுடன் தொடர்புடைய காரணங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

