இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் மீண்டும் இடமளிக்கப் போவதில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி!
நாட்டில் மீண்டும் இனவாதமோ அல்லது மதவாதமோ தலைதூக்குவதற்கு எக்காரணம் கொண்டும் இடமளிக்கப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் நிலையம், மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“வட மாகாணம் தொடர்பில் நாம் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம். சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
தோல்வியடைந்த சில அரசியல்வாதிகள், சில சிறிய விடயங்களைக் கையில் எடுத்துக்கொண்டு, மீண்டும் இனங்களுக்கு இடையே விரிசல்களை ஏற்படுத்தவும், அமைதியின்மையை உருவாக்கவும் முற்படுகின்றனர்.
அவர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு, இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் அவதானித்துள்ளோம்.
எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது குழுக்களுக்கோ, இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தையோ அல்லது மதவாதத்தையோ பரப்புவதற்கு நாம் எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்” என அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

