ஹோரனாவில் அரசு வங்கி ஊழியர்கள் பணம் எடுத்துச் சென்றபோது, 35 மில்லியன் ரூபா பகல் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை பேச்சாளர் எஸ்.எஸ்.பி எஃப்.யூ. வூட்லரின் கூற்றுப்படி, வங்கி ஊழியர்கள் வங்கியிலிருந்து பணத்துடன் இரண்டு பைகளை வெளியே எடுத்து வந்தபோது, பிற்பகல் 2:45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த பணம் இரண்டு வெவ்வேறு கிளைகளுக்கு கொண்டு செல்லப்படவிருந்தது.
பணம் கொண்டு செல்லப்பட்ட தருணத்தில், பாதசாரியாக வந்த சந்தேக நபர் ஒருவர் திடீரென நெருங்கி, பணமிருந்த இரண்டு பைகளையும் பறித்துச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பணத்துடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

