நீரிழிவு நோய் (Diabète) உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 12 உணவுகள்!

நீரிழிவு நோய் (Diabète) உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 12 உணவுகள்!

பிரான்சில் சுமார் 4.5 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் பெரும்பான்மையானோர் வயது வந்த பிறகு உருவாகும் ‘வகை 2’ (Diabète de type 2 – DT2) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்பட்ட உயர் இரத்தச் சர்க்கரை (Hyperglycémie) மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் இந்த நோய் ஏற்படுகிறது. நோய் இருப்பது கண்டறியப்பட்டால், உணவு முறையில் அதிகக் கவனம் செலுத்துவது அவசியம்.

 

அந்த வகையில், நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 12 முக்கிய உணவுகளின் பட்டியல் இதோ:

 

1. இனிப்புக் கிரீம்கள் (Les crèmes desserts)

இனிப்புப் பிரியர்கள் இந்த வகையான டெசர்ட் கிரீம்களைத் தவிர்ப்பது கடினம் என்றாலும், இவற்றில் அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளதால் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, அதே சுவையுடன் கூடிய சர்க்கரையற்ற (Sans sucre) கிரீம்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன.

 

2. சிக்கன் நக்கெட்ஸ் (Les nuggets)

துரித உணவு (Fast-food) உணவகங்களில் விற்கப்படும் நக்கெட்ஸ்களில் வெறும் கோழி இறைச்சி மட்டும் இருப்பதில்லை; அதிகளவிலான கொழுப்பும் சேர்ந்துள்ளது. எண்ணெயில் பொரிக்கப்படுவதாலும், சாஸ்களுடன் சேர்த்து உண்ணப்படுவதாலும், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தான ஒரு கலவையாக மாறுகிறது.

 

3. தயார் நிலை உணவுகள் (Les plats cuisinés)

கடைகளில் விற்கப்படும் சமைத்த உணவுகள் நேரம் மிச்சமாவதால் பலருக்கும் வசதியாக இருக்கலாம். ஆனால், இவற்றில் நிறைவுற்ற கொழுப்புகள் (Graisses saturées) மிக அதிகம். வீட்டிலேயே எளிதாகச் சமைத்து உண்பதே நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்தது.

 

4. மயோனைஸ் (La mayonnaise)

மயோனைஸில் மாவுச்சத்து (Glucides) குறைவாக இருந்தாலும், கொழுப்பு மிக அதிகம். மேலும், இது பெரும்பாலும் சாண்ட்விச் அல்லது பிரெஞ்ச் ப்ரைஸ் போன்ற இரத்தச் சர்க்கரையை உயர்த்தும் உணவுகளுடன் சேர்த்தே உண்ணப்படுகிறது.

 

5. பிரெஷ் கிரீம் (La crème fraîche)

சாதாரண பிரெஷ் கிரீமில் பொதுவாக 30% கொழுப்பு உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது உகந்ததல்ல. கடைகளில் விற்கப்படும் கொழுப்பு குறைக்கப்பட்ட (Allégée) கிரீம்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

 

6. சோடா பானங்கள் (Les sodas)

நீரிழிவு நோயாளிகளுக்கு சோடா பானங்கள் மிகவும் ஆபத்தானவை. இவற்றில் உள்ள அதீத சர்க்கரை, கிளைசெமிக் அளவை (Glycémie) உடனடியாக உயர்த்தும். ‘லைட்’ (Light) வகைகளில் சர்க்கரை குறைவாக இருந்தாலும், அவையும் நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

7. மது (L’alcool)

மிதமான அளவு மது அருந்துவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ்களுக்கு மேல் அருந்தினால் சிக்கல்கள் ஏற்படும். இது இரத்தச் சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி, இரவிலோ அல்லது விழிக்கும்போதோ சர்க்கரை அளவை அதலபாதாளத்திற்குக் (Hypoglycémie) கொண்டு சென்றுவிடும்.

 

8. வெள்ளை அரிசி (Le riz blanc)

பலமுறை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி இரத்தச் சர்க்கரையை வேகமாக உயர்த்தும்; இதனைச் சமாளிக்க உடல் மிகவும் சிரமப்படும். இதற்குப் பதிலாகச் சமைக்கச் சற்று நேரம் எடுத்தாலும், முழு தானியமான பழுப்பு அரிசியைப் (Riz complet) பயன்படுத்துவது நல்லது.

 

9. மிட்டாய்கள் மற்றும் இனிப்புகள் (Les bonbons et confiseries)

இவற்றில் அதிகளவு “வேகமாகச் செயல்படும் சர்க்கரை” (Sucre rapide) உள்ளதால், இரத்தச் சர்க்கரை அளவைச் சட்டென உச்சத்திற்குப் கொண்டு செல்லும். இனிப்பு சாப்பிடத் தோன்றினால், சர்க்கரை சேர்க்கப்படாத மாற்றுச் சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பதே விவேகம்.

 

10. தொழிற்சாலை தயாரிப்பு பண்டங்கள் (Les pâtisseries industrielles)

 

வெதுப்பகங்களில் விற்கப்படும் கேக் மற்றும் இனிப்புப் பண்டங்களில் சுத்திகரிக்கப்பட்ட மாவு (Farines raffinées), செயற்கை இனிப்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளதால் இவை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாற்றிவிடும்.

 

11. உருளைக்கிழங்கு பொரியல் (Les pommes de terre frites)

 

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கில் துரித மாவுச்சத்தும், நிறைவுற்ற கொழுப்புகளும் உள்ளன. இது இரத்தச் சர்க்கரையை உயர்த்துவது மட்டுமின்றி, தேவையற்ற கலோரிகளைச் சேர்த்து உடல் எடையையும் அதிகரிக்கும் (இது வகை-2 நீரிழிவு நோய்க்கான முக்கிய அபாயக் காரணியாகும்). எண்ணெயின்றி ஓவனில் பேக் (Au four) செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிறந்த மாற்று.

 

12. வெள்ளை பாண் (Le pain blanc)

சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளை பாணில் ‘கிளைசெமிக் குறியீடு’ (Index glycémique) மிக அதிகம். காலை உணவாகவோ அல்லது சாண்ட்விச் வடிவத்திலோ இதனைத் தொடர்ந்து சாப்பிடுவது இரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதைக் கடினமாக்கும்.

Recommended For You

About the Author: admin