நிம்மதியாக வாழ்வதற்கு மாதத்திற்கு கூடுதலாக 506 யூரோக்கள் தேவை

நிம்மதியாக வாழ்வதற்கு , அடிப்படை சம்பளத்தை விட மாதத்திற்கு கூடுதலாக 506 யூரோக்கள் தேவை என பிரெஞ்சு மக்கள் தெரிவிப்பு!

மீண்டும் பணவீக்கம் (inflation) அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையைச் சீராக நடத்த, சராசரியாக 506 யூரோக்கள் கூடுதலாகத் தேவைப்படுவதாக ‘எலாப்’ (Elabe) என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

 

இந்த ஆய்வின் முக்கிய முடிவுகள் படி ,

 

ஆடம்பரமாக வாழ்வதற்கு மாறாக அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து “நிம்மதியாக வாழ்வதற்குத்” தற்போதைய வருமானம் போதாது என மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தெரிவித்துள்ளனர். எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் பணவீக்கத்தால் 81% மக்கள் தங்கள் செலவுகளைச் சுருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

 

கூடுதலாக எவ்வளவு பணம் தேவை? (67% மக்களின் கருத்து)

 

250 யூரோக்கள் வரை தேவை: 15%

 

250 முதல் 499 யூரோக்கள் வரை: 17%

 

500 முதல் 999 யூரோக்கள் வரை: 22%

 

1000 யூரோக்களுக்கு மேல்: 13%

 

மாறாக, 33% மக்கள் தற்போதைய வருமானமே தங்களுக்குப் போதுமானது எனக் கூறியுள்ளனர். இது அவர்களின் வயது, தொழில் மற்றும் அரசியல் நிலைப்பாட்டைப் பொறுத்து மாறுபடுகிறது.

 

வயது மற்றும் தொழில்: நிர்வாகப் பதவிகளில் உள்ளவர்களில் (cadres) 46% பேருக்குக் கூடுதல் பணம் தேவையில்லை.இவர்கள் அதிக ஊதியம் பெறுபவர்கள் (ஆனால் சாமானிய மக்களில் 24% பேர் மட்டுமே இப்படித் தெரிவித்துள்ளனர்). அதேபோல, முதியவர்கள் (65 வயதுக்கு மேற்பட்டோரில் 43%) தற்போதைய நிலையிலேயே அதிக திருப்தி அடைந்துள்ளனர்.

 

ஆளும் ‘மறுமலர்ச்சி’ (Rennaissance) கட்சி ஆதரவாளர்களில் பெரும்பான்மையானோர் (60%) தங்களுக்குக் கூடுதல் பணம் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக வலதுசாரி (LR) ஆதரவாளர்கள் 44% பேரும், இடதுசாரிகள் 35% பேரும் திருப்தியடைந்துள்ளனர். ஆனால், தீவிர வலதுசாரி (RN) ஆதரவாளர்களில் வெறும் 27% பேர் மட்டுமே தற்போதைய வருமானத்தில் போதுமான அளவு திருப்தி அடைந்துள்ளனர்.

 

“கண்ணியமான சம்பளம்” (Salaire décent) என்றால் என்ன?

 

கண்ணியமான வாழ்க்கை என்பது உணவு, உறைவிடம், மருத்துவம், குழந்தைகளின் கல்வி, சேமிப்பு மற்றும் ஓய்வு நேரச் செலவுகளை (Loisirs) உள்ளடக்கியதாகும் . இது தொடர்பாகப் பொருளாதார நிபுணர்களின் மதிப்பீடுகள் பின்வருமாறு:

 

நிபுணர்களின் கணக்கீடு: 2023-ல் ஒரு தனிநபர் கண்ணியமாக வாழ 1,630 யூரோக்கள் தேவை என IRES நிறுவனம் மதிப்பீடு செய்திருந்தது . அதேபோல, 2024-ல் இது 1,659 யூரோக்களாக இருக்கும் என UNAF அமைப்பு கணக்கிட்டுள்ளது.

 

குறைந்தபட்ச ஊதியத்துடன் (Smic) ஒப்பீடு: மக்களுக்கும் நிபுணர்களுக்கும் தேவைப்படும் இந்தத் தொகையானது, பிரான்சின் தற்போதைய நிகரக் குறைந்தபட்ச ஊதியத்தை விட (SMIC net) மிக அதிகமாகவே உள்ளது.

(குறைந்தபட்ச ஊதிய நிலவரம்: 2023-ல் 1,350 € -> 2024-ல் 1,398 € -> 2025-ல் 1,426 € -> 2026-ல் 1,443 € என உள்ளது குறிப்பிடத்தக்கது).

Recommended For You

About the Author: admin