பல் இல்லாதவர்களுக்கு இனி கவலை இல்லை! ஜப்பானின் புதிய மருத்துவ கண்டுபிடிப்பு

பல் இழந்தவர்களுக்கு இயற்கையாகவே புதிய பற்களை முளைக்கச் செய்யும் ஒரு புதிய மருத்துவ முறையை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பம் தற்போது மருத்துவ உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டோரெஜெம் பயோபார்மா என்ற நிறுவனம், TRG-035 என்ற புதிய மருந்தை உருவாக்கியுள்ளது.

இது பற்கள் வளர்வதை கட்டுப்படுத்தும் USAG-1 என்ற புரதத்தைத் தடுப்பதன் மூலம், தாடையில் உறங்கிக் கொண்டிருக்கும் பற்களின் மொட்டுகளை மீண்டும் செயல்படத் தூண்டுகிறது.

2024 அக்டோபரில் தொடங்கிய இதன் முதற்கட்ட மனித மருத்துவச் சோதனைகள், ஆரோக்கியமான 30 ஆண்களிடம் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

இதில் எந்தவிதமான தீவிரமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, பிறவியிலேயே பற்கள் குறைபாட்டுடன் அவதிப்படும் நோயாளிகளைக் குணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இரண்டாவது கட்ட சோதனைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக சமீபத்தில் சுமார் 5.3 மில்லியன் டாலர் கூடுதல் நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்த மருந்து இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளது. இருப்பினும், ஆய்வுக் குழுவினர் 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த மருத்துவ முறையை பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது பல் இழந்தவர்களுக்கு டென்ச்சர்கள் அல்லது இம்ப்ளான்ட்கள் மட்டுமே தீர்வாக உள்ளன. இந்த புதிய மருந்து முறை நடைமுறைக்கு வந்தால், எந்தவித செயற்கை உதவியும் இன்றி, இயற்கையான முறையில் மீண்டும் பற்களைப் பெற முடியும்.

இது பல் மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: இது தற்போது பரிசோதனை நிலையில் உள்ள மருத்துவ ஆய்வு மட்டுமே. இது குறித்த மேலதிகத் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ மருத்துவ அறிவிப்புகளைப் பின்தொடர்வது சிறந்தது.

Recommended For You

About the Author: admin