தையிட்டியில் முன்னர் விகாரை இருந்ததா?: 1971 ஆம் ஆண்டு வரைபடம் வெளியாகியதால் சர்ச்சை!
தையிட்டிப் பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளைச் சுற்றியுள்ள சர்ச்சை தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இதுவரை அந்தப் பகுதிக்கு உரிய அதிகாரபூர்வ வரைபடம் இல்லை என்று ஆளும் தரப்பினரும், அரச அதிகாரிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் 1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலஅளவைத் திணைக்கள வரைபடம் ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தப் புதிய தகவல் அரசின் முந்தைய நிலைப்பாடுகள் குறித்துக் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இந்த வரைபடத்தின் பிரதி ஒன்றை நில அளவை திணைக்களத்திலிருந்து பெற்றுள்ள இலங்கை சிவசேனைத் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அதன் பிரதிகளை யாழ்.அரச அதிபர், வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
நில அளவைத் திணைக்களத்தினால் 1971 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வரைபடத்தில், தையிட்டி கலைவாணி வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எந்தப் பௌத்த விகாரையும் பதிவு செய்யப்பட வில்லை என தெரியவந்துள்ளது.
இதனால், தற்போதைய விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலத்தின் வரலாற்று நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, அந்த நிலம் முன்பே தனியார் அல்லது உள்ளூர் மக்களின் காணியாக இருந்ததா என்ற விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த வரைபடம் கடந்த ஏப்ரல்- 21 ஆம் திகதி நில அளவைத் திணைக்களத்திலிருந்து அதிகாரபூர்வமாகப் பெறப்பட்டுள்ளது.
தையிட்டிகப் பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் காணிகள் தங்களுக்குச் சொந்தமானவை எனக் கூறி அப்பகுதி மக்கள் பல மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காணிகளை விடுவிக்க வேண்டும், தங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாகும். இந்த நிலையில் புதிய வரைபடத்தின் வெளிப்பாடு போராட்டத்திற்கு கூடுதல் வலுவாக மாறியுள்ளது.
காணிகளை விடுவிப்பதற்காக அவற்றை அளவீடு செய்தற்காக இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
இதுவரை, அந்தப் பகுதிக்கான தெளிவான வரைபடம் இருந்தால் பிரச்சினையை எளிதில் தீர்க்க முடியும் என்று ஆளும் தரப்பு வலியுறுத்தி வந்தது. ஆனால், 1971 ஆம் ஆண்டிலேயே அத்தகைய வரைபடம் தயாரிக்கப்பட்டிருந்தது என்பது தற்போது வெளிவந்துள்ளதால், அரசின் முன்கூட்டிய விளக்கங்கள் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும், இந்த வரைபடம் ஏன் இதுவரை பொதுமக்கள் முன் வெளிப்படுத்தப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் இனி சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடுமெனக் கணிக்கப்படுகிறது.
தையிட்டி விகாரை நில விவகாரம் இனி ஒரு சாதாரண நில பிரச்சினை அல்ல. இது ஆவணங்கள், உரிமைகள், அரசின் பொறுப்புத்தன்மை ஆகியவற்றை சோதிக்கும் முக்கியமான விடயமாக மாறியுள்ளது.
1971 வரைபடத்தின் வெளிப்பாடு இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணரும் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இதன் முழு விளைவுகள் அடுத்தடுத்த நாள்களில் எவ்வாறு உருவாகும்? என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
இ.முரளிதரன் (வடக்கு மாகாணக் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர்)

