இலங்கையில் பிறப்புச் சான்றிதழில் பெயரை மாற்றுவது எவ்வாறு??

இலங்கையில் பிறப்புச் சான்றிதழில் பெயரை மாற்றுவது எவ்வாறு??

கடந்த 2006ஆம் ஆண்டு எனது தாயாருக்கு இரட்டைப் பிரசவம் நடந்தது. ஒருவர் பெண் மற்றையவர் ஆண். எங்களுக்கு தம்பி, தங்கை. அந்தக்காலம் அனைவருக்கும் தெரிந்த காலப்பகுதி. எங்கள் மாவட்டம் கிளிநொச்சி. ஆகையால் பிரசவ வார்ட்டின் முற்பகுதியில் ‌ஒரு பெரிய கட்டுப்புத்தகம் இருக்கும். அதற்குள் #தூயதமிழ்ப்பெயர்கள் இருக்கும். அதில் ஒரு பெயரை நாங்கள் தெரிவு செய்து வைத்தால் அவர்களுடைய வங்கியில் 5000 ரூபா வைப்பிலிடுவார்கள். எங்களுடைய அப்பா இரட்டையர்கள் பிறந்ததும் இரு பெயர்களை தானே தெரிவு செய்தார். எங்களுக்கு வைத்ததைப் போன்றே. அந்தப் பெயர்கள் எனது அம்மாவுக்கு பிடிக்கவில்லை உடனே அம்மா அந்தப் புத்தகத்தில் இருந்து இரு பெயர்களை தெரிவு செய்து ஆஸ்பத்திரியில் வைத்தே பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்தும் விட்டார். அவ்வளவு தான். அன்றிலிருந்து இன்றுவரை அந்தப் பெயர்களைத் தான் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அப்பாவிற்கு அந்தப் பெயர்களில் ஒருபோதும் விருப்பம் இருந்ததில்லை. அவர் உயிருடன் இருக்கும் போது பலதடவைகள் முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை. இறுதியாக அவர் இறக்கும் போதும் என்னிடம் கூறிய வார்த்தைகள் இரட்டையர்களின்‌ பெயர்களை நீங்கள் தான் மாற்ற வேண்டும். அப்பொழுது தான் அப்பா சந்தோசப்படுவேன் என்றார். அவர்களுக்கு என்ன பெயர்கள் வைக்க வேண்டும் என அவரது கைப்பட எழுதி தந்தார். அப்பா இறந்ததும் நான் பல தடவைகள் முயற்சித்தேன் ஆனால் வீட்டில் யாருக்கும் விருப்பம் இருக்கவில்லை. இரட்டையர்கள் பதினெட்டு வயதை தாண்டிவிட்டார்கள். இப்பொழுது அவர்கள் விரும்புகிறார்கள் தங்கள் பெயர்களை மாற்ற வேண்டும் என. ஆகவே முயற்சித்தேன்.. அதையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் ஒன்றில் பெயரை மாற்றுவது என்பது ஒரு முறையான சட்டபூர்வமான செயல்முறையாகும்.

 

இதனை பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தின் கீழ் உங்களுடைய பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யப்பட்ட பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளலாம்.

 

பெயரை மாற்றுவதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டியவை.

 

#தகுதிகள் (யார் விண்ணப்பிக்கலாம்?)

18 வயதிற்கு உட்பட்டவர்கள் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாவலர் ஊடாக விண்ணப்பிக்கலாம். ( B09 விண்ணப்பம்)

 

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக ( B10 விண்ணப்பம்) விண்ணப்பிக்கலாம்.

 

#தேவையான ஆவணங்கள்

பெயர் மாற்றத்திற்கான நியாயமான காரணத்தை நிரூபிக்க பின்வரும் ஆவணங்கள் பொதுவாகத் தேவைப்படும்:

 

#தற்போதைய பிறப்புச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.

 

#பெயரை மாற்றுவதற்கான காரணத்தை விளக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடான கோரிக்கைக்கடிதம்.

 

#சத்தியக் கடதாசி (Affidavit)

 

#முழுமையான பெயர் மாற்றமெனில் 1 வருட காலம் பூர்த்தியான பத்திரிகை அறிவித்தல்

 

#புதிய பெயரில் நீங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்படுகிறீர்கள் என்பதற்கான ஆதாரங்கள் (உதாரணமாக: பாடசாலைப் பதிவுகள், வங்கிப் புத்தகங்கள், தேசிய அடையாள அட்டை, திருமணச் சான்றிதழ் போன்றவை, ஏதேனும் சான்றிதழ்கள், வைத்தியசாலை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் வழங்கப்படும் சிட்டுகள் ).

( ஏதேனும் 3 ஆவணங்கள் போதுமானது)

 

#விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டை (NIC)/ கடவுச்சீட்டு/ சாரதி அனுமதி அட்டை என்பவற்றின் பிரதி)

 

#மதமாற்றம் மூலமான பெயர் மாற்றமெனில் மதஸ்தாபனந்தினால் வழங்கப்படும் கடிதம்

 

#செயல்முறை (Step-by-Step)

விண்ணப்பப் படிவம்:

 

#உங்கள் பிறப்பு பதிவு செய்யப்பட்ட பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகத்திற்கு (Divisional Secretariat) சென்று, மேலதிக பதிவாளர் பிரிவில் இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 

#படிவத்தை நிரப்புதல்: படிவத்தில் தற்போதைய பெயர் மற்றும் மாற்ற விரும்பும் புதிய பெயர் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

 

#மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் உங்களது விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

 

இதற்காக நிர்ணயிக்கப்பட்ட சிறிய ( 60/=) கட்டணத்தைச் செலுத்தி, அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

மேலுள்ள ஆவணங்களை சமர்ப்பித்ததும் உங்களது பிரதேச செயலகப்பிரிவின் மாவட்ட பதிவாளர் உங்களுடைய பிறப்புப்பதிவின் 13ம் கூட்டில் உங்களது புதிய பெயரை எழுதுவார் அதன் பின் உரிய கட்டணத்தை செலுத்தி பிரதியினை பெற்றுக்கொள்ள முடியும். மேலுள்ள ஆவணங்களை சமர்ப்பித்ததும் பிரதேச செயலகப்பிரிவின் மாவட்ட பதிவாளர் மாற்றம் செய்வதற்கு மறுப்பாராயின் பெயர் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் பெற்று மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றினை சட்டத்தரணியூடாக தாக்கல் செய்து உங்களது உரிமையினை பெற்றுக்கொள்ள முடியும்.

 

பெயர் மாற்றம் செய்த பின் உங்களுடைய ஏனைய ஆவணங்களுக்குரிய திணைக்களங்களிலும் விண்ணப்பித்து உங்களுடைய புதிய பெயரினை மாற்றிப் பயன்படுத்தலாம். (உ+ம் NIC, Driving Licence, Passport, Degree Certificate, O/L, A/L Results Sheet etc).

 

உங்களுக்கு பிடிக்காத பெயர்களுடன் வாழ விருப்பமில்லாத வர்கள். முயற்சித்து பாருங்கள்.

Recommended For You

About the Author: admin