தலதா மாளிகையிலிருந்து கேகாலை நோக்கி: சமாதான நடைப்பயணத்தின் 3-ஆம் நாள் ஆரம்பம்!
இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் “அமைதித் தீவில் உலகளாவிய அமைதி நடைப்பயணம்” (Global Walk For Peace In The Island Of Peace) தனது மூன்றாவது நாளை இன்று (2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை) கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பித்தது.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் வேண்டுகோளுக்கிணங்க, ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) முன்முயற்சியின் ஆதரவுடன் இந்த நடைப்பயணம் இடம்பெற்று வருகின்றது.
இன்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டு, மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்தைப் பெற்று நடைப்பயணம் தொடங்கியது.
வியட்நாமைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பன்னகார தேரர், ஏனைய மகா சங்கத்தினர் மற்றும் புகழ்பெற்ற சேவை நாயான ‘ஆலோகா’ (Aloka) ஆகியோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர். கண்டியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேகாலை, பெலிகம்மன ரஜமஹா விகாரையை இன்று மாலை சென்றடையவுள்ளது.
பேராதனை, பிலிமத்தலாவை, கடுகண்ணாவ மற்றும் மாவனல்லை ஊடாக இந்தப் பயணம் இன்று அமையும்.
முதலாம் நாள் தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையிலிருந்து மாத்தளை அலுவிஹாரை வரை (47 கி.மீ) இடம்பெற்ற இந்தப்பயணம் இரண்டாம் நாள் மாத்தளை அலுவிஹாரையிலிருந்து கண்டி நகரை வந்தடைந்தது.
நேற்றிரவு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர்.
நாளை ஏப்ரல் 25ம் திகதி பெலிகம்மன ரஜமஹா விகாரையில் ஆரம்பமாகவும் நடைப்பயணம் ஏப்ரல் 28ம்திகதி களனி ரஜமஹா விகாரைசுதந்திர சதுக்கத்தை மாலை 4:00 மணிக்கு வந்தடையும்.
அங்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களினால், அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள மகா சங்கத்தினரிடம் ஸ்ரீ மகா போதியின் கன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும்.
அதன்பின்னர், கங்காராம விகாரையைச் சென்றடைந்து இந்த உலகளாவிய அமைதி நடைப்பயணம் நிறைவுபெறும்.

