கிவ்வில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி; மொஸ்கோவில் பிறந்த நபர் காவற்துறையினரால் சுட்டுக்கொலை!

உக்ரைன் தலைநகர் கிவ்வின் ஹொலோசிவ்ஸ்கி (Holosiivskyi) மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 18, 2026) இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூடு மற்றும் பிணைக்கைதிகள் கடத்தல் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிதாரியை உக்ரைன் காவற்துறையினர் அதிரடியாகச் சுட்டுக்கொன்றதை அடுத்து இந்த பதற்றநிலை முடிவுக்கு வந்தது.

இன்று மதியம் ஹொலோசிவ்ஸ்கி பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்த நால்வரை நோக்கி துப்பாக்கிதாரி திடீரென சரமாரியாகச் சுடத் தொடங்கினார்.

பின்னர் அருகில் இருந்த சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்குள் புகுந்த அவர், அங்கிருந்த ஒருவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு சிலரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தார். காயமடைந்தவர்களில் ஒரு இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட 15 பேர் வரை காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த உக்ரைன் காவற்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர், சுமார் 40 நிமிடங்கள் துப்பாக்கிதாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்க அனுமதிக்குமாறும், சரணடையுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், துப்பாக்கிதாரி அதற்கு இணங்காத நிலையில், காவற்துறை பிரிவினர் கடையை முற்றுகையிட்டனர். அப்போது அவர் காவற்துறையினரை நோக்கிச் சுடவே, பதில் தாக்குதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தாக்குதலில் ஈடுபட்டவர் மொஸ்கோவில் பிறந்த 58 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார்.

கடந்த டிசம்பர் 2025-இல் சரியான மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்து அவர் தனது துப்பாக்கி உரிமத்தைப் புதுப்பித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை; எனினும் அவரது பின்னணி குறித்து உக்ரைன் பாதுகாப்புச் சேவையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin