பாடசாலைகளுக்குள் நேரடி மத நூல் விநியோகத்திற்குத் தடை!!
வடமாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு!
வடமாகாணப் பாடசாலைகளில் மத நூல்களை விநியோகிப்பது தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் புதிய மற்றும் கடுமையான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.
வெளியார் அல்லது அமைப்புகள் பாடசாலைகளுக்குள் நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை இனி முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் திட்டவட்டமாக அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளார்.
எந்தவொரு வெளி நபரோ அல்லது அமைப்போ பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களுக்கு நேரடியாக மத நூல்களை வழங்கக் கூடாது.
பைபிள்களை விநியோகிக்க விரும்பும் தொண்டு நிறுவனம், அவற்றை முதலில் வடமாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும்.
திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்கள், கிறிஸ்தவ பாடத்திற்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும்.
குறித்த பாடத்தைக் கற்கும் மற்றும் அந்த நூல் அவசியமான மாணவர்களுக்கு மாத்திரமே, கல்வித் திணைக்களத்தின் ஊடாக அவை விநியோகிக்கப்படும்.
ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதத்திலிருந்த வாசகப் பிழையாலேயே அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் வழங்கப்படவுள்ளதாகப் புரிந்துகொள்ளப்பட்டுச் சர்ச்சை வெடித்ததாக ஆளுநர்
அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்கள் மற்றும் மதமாற்றக் குற்றச்சாட்டுகள் எழுவதைத் தவிர்ப்பதுமே இந்த புதிய நடைமுறையின் பிரதான நோக்கமாகும் என ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

