கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு
அநுர அரசாங்கம், தயாரித்த பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு (Protection of the State from Terrorism Act -PSTA) எதிராக ஈழத் தமிழர் பிரதேசங்களில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது.
பொதுமக்களின் கையெழுத்து பிரதிகள் அடங்கிய மகஜர், இன்று வியாழக்கிழமை கொழும்பு -07 இல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில்
(United Nations Compound)
கையளிக்கப்பட்டுள்ளது.
குரல் அற்றோரின் குரல் (Voice of the Voiceless) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன், யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், மூத்த ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான ஜெரா (Jera Thampi) ஆகியோர் மகஜரை உயர்ஸ்தானிகராலய அதிகாரியிடம் கையளித்தனர்.
பின்னர் ஐ நா அலுவலகத்தில் உரையாடல் ஒன்றும் நடைபெற்றது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு ஆபத்தானது என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும் வேலன் சுவாமிகள், உரையாடலின்போது எடுத்துக் கூறினார்.
கோமகன், ஜெரா ஆகியோர் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்தனர். புதிய சட்டமூலம் அவசியமற்றது என அழுத்திக் கூறினா்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் ஆபத்துகள் பற்றியும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாமை தொடர்பான ஆபத்துகள் குறித்தும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கையெழுத்துக்களும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

