ஈரானில் பாரிய கைது வேட்டை:

ஈரானில் பாரிய கைது வேட்டை:

இஸ்ரேலிய உளவாளிக்குத் தூக்கு –

“அமெரிக்கா தோல்வியைத் தழுவுகிறது” என ஈரான் பகிரங்க அறிவிப்பு!

ஈரானின் முக்கியத் தலைவர்களான அலி லாரிஜானி, பாசிஜ் படைத் தளபதி சுலைமானி மற்றும் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் ஆகியோர் அடுத்தடுத்துக் கொல்லப்பட்ட நிலையில்,

 

ஈரானுக்குள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களுக்கு ஆதரவாகச் செயற்படும் “துரோகிகளை” ஒடுக்கும் பாரிய நடவடிக்கையை ஈரான் ஆரம்பித்துள்ளது.

 

நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய உளவுத்துறை அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

உள்நாட்டு ஒடுக்குமுறை மற்றும் கைதுகள்:

ஈரானின் 31 மாகாணங்களில் 26 மாகாணங்களில் இயங்கி வந்த 111 “முடியாட்சிக்கு ஆதரவான” (Pro-monarchy) குழுக்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.

 

இணைய முடக்கம் மூன்றாவது வாரமாகத் தொடரும் நிலையில், வெளிநாட்டு ஊடகங்களுக்குக் காணொளிகளை அனுப்பிய குற்றச்சாட்டில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த 350 ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) செய்மதி இணையச் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

மேலும், கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி கொல்லப்பட்ட ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) உருவப்படங்களை எரித்த குற்றச்சாட்டில் கராஜ் (Karaj) நகரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். த

 

ற்போது அவரது மகன் முஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) புதிய அதியுயர் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

 

இஸ்ரேலிய உளவாளிக்கு மரண தண்டனை:

 

இதற்கிடையில், கௌரோஷ் கேவானி (Kourosh Keyvani) என்ற இளைஞர் இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டுள்ளார்.

 

எனினும், இது ‘கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம்’ (Forced confessions) என ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

ஈரானின் சவால்:

 

இத்தனை இழப்புகளுக்கு மத்தியிலும் ஈரானிய அரசாங்கம் உறுதியாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி (Abbas Araghchi) அல்-ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

 

ஈரானிய நீதித்துறைத் தலைவர் குலாம்-ஹுசைன் மொஹ்செனி எஜே (Gholam-Hossein Mohseni Ejei) வெளியிட்ட காணொளியில், “மேற்கத்திய நாடுகளின் ஆணவம் உடைக்கப்பட்டுள்ளது.

 

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க நேட்டோ நாடுகளிடம் அமெரிக்கா பிச்சை கேட்கிறது. இதுவே அமெரிக்காவின் தோல்வியாகும்” என மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Recommended For You

About the Author: admin