மெக்கா பள்ளிவாசலில் ஒழுங்கீனச் செயல் குற்றச்சாட்டு: பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவருக்கு சவூதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றம்!
சவூதி அரேபியாவின் மெக்கா பிராந்தியத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், பங்களாதேஷைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய உள்துறை அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும், இந் நடவடிக்கை குறித்து தங்களுக்கு முன்கூட்டியே எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என ஜெட்டாவிலுள்ள பங்களாதேஷ் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நசெருல் இஸ்லாம் அப்துல் பசீர் மற்றும் சிட்டி அக்தர் ஆகிய இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கே இவ்வாறு மெக்கா பிராந்தியத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
புனித ஸ்தலமான பள்ளிவாசல் வளாகத்தில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் சவூதி பாதுகாப்புப் படையினரால் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்கள் மீது உத்தியோகபூர்வமாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னரே மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்துத் தங்களுக்கு சவூதி அதிகாரிகளால் முன்னறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை என ஜெட்டாவில் இயங்கி வரும் பங்களாதேஷ் துணைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

