எரிசக்தி உள்கட்டமைப்புகள் சிதைப்பு:
“எதிரிகளின் தளங்கள் எரித்து சாம்பலாக்கப்படும்” –
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!
தெற்கு ஈரானில் அமைந்துள்ள தங்களது எரிசக்தி மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) மிகக் கடுமையான மற்றும் திட்டவட்டமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரானின் ‘மெஹ்ர்’ (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், IRGC-இன் ‘கட்டாம் அல்-அன்பியா’ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளார். “எமது நாட்டின் எரிசக்தி வளங்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளின் எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள் கிடைக்கக்கூடிய முதல் வாய்ப்பிலேயே முழுமையாக எரித்து சாம்பலாக்கப்படும்,” என அவர் சூளுரைத்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், “இது குற்றவாளிகளுக்கு விடுக்கப்படும் உறுதியான மற்றும் நேரடியான எச்சரிக்கையாகும். கோழைத்தனமான ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்ட அமெரிக்க ராணுவத்திற்கும், குழந்தைகளைக் கொன்று குவிக்கும் கொடூரமான சியோனிச (இஸ்ரேல்) அரசுக்கும் நாங்கள் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறோம்: மிக விரைவில் நீங்கள் உங்கள் வீரர்களை நடுக்கடலில் தள்ளிவிட்டு, உங்களின் ஒட்டுமொத்த கௌரவத்தையும் காற்றில் பறக்கவிட வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்,” என மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடப்பட்டுள்ளது.

