யாழில்பிணையில் விடுவிக்கப்பட்ட காவாலிகள் தப்பி ஓட்டம்!! சரணடையாவிட்டால் சொத்துக்களை முடக்கம்! யாழ் நீதவான் நீதிமன்றம் அதிரடி!
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளுக்கான தவணைகளில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சந்தேக நபர்கள் ஒரு மாத காலத்திற்குள் நீதிமன்றில் முன்னிலையாகாத பட்சத்தில் அவர்களது சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு பொலிஸாரால் சந்தேக நபர்களின் வசிப்பிடங்களிலும் பொது இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பத்திராஜா மற்றும் யாழ்ப்பாணம் தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி இந்திக்க ஆகியோரின் நேரடி பங்கேற்புடன் இந்த நடவடிக்கை இன்றுமுன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்ற கட்டளை காட்சிப்படுத்தப்பட்ட இன்றைய தினத்திலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திலோ அல்லது யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்திலோ காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முன்னிலையாகுமாறு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மன்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முற்பட தவறும் பட்சத்தில், குறித்த நபர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த கட்டளை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டதுடன், பொலிஸாரால் ஒலிபெருக்கி மூலமும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

