செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: மரண தண்டனை கைதி சோமரத்னவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், மரண தண்டனை கைதியான முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது: தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை மன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இரண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
கிரிசாந்தி குமாரசுவாமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அனுமதி கோரியிருந்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்று விசாரணைக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள செம்மணி புதைகுழி வழக்கு தொடர்பான நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆராய்ந்த பின்னரே மேலதிக நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளது.
1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணைகளின் போதே செம்மணிப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் உள்ளமை தொடர்பான விபரங்களை இவர் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


