பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இலங்கையில் பெண் ஓட்டல் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு.. உதவி கோரி கூச்சல் – டி20 உலக கோப்பையில் சம்பவம்..!
T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணி பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
முதலில் இந்திய அணியுடனான போட்டியில் விளையாட முடியாது என கூறிய பாகிஸ்தான அணி, பின்னர் ஐசிசியின் கண்டிப்புக்குப் பிறகு இந்திய அணியுடனான போட்டியில் விளையாடியது. இருப்பினும், லீக் ஆட்டத்தில் இந்தியாவுடன் மிக மோசமான தோல்வியை அடைந்து சூடு வாங்கிக் கொண்டது.
சூப்பர் 8 சுற்றிலும் இலங்கையுடனான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது.
கேப்டன் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்வியால் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. ஐசிசி தொடர்களில் தொடர்ந்து 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டிருப்பதற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்நாட்டு ரசிகர்களும் தங்கள் சொந்த நாட்டு வீரர்களை வசைபாடி வருகின்றனர்.
குறிப்பாக இந்திய அணியுடன் தோல்வி காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் தலா 16 லட்சம் ரூபாயை அபராதம் விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு கண்டனங்களும் எழுந்துள்ளன.
உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு உறுப்பினரான அலீம் தர் , தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன், கேப்டன் அலி ஆகா ஆகியோரையும் கடுமையாக அவர் சாடியுள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தான் அணி மேலும் ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளாகி இருக்கிறது. இலங்கையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி பாகிஸ்தான் அணி இலங்கை அணிகள் சூப்பர்-8 சுற்றில் மோதின. இந்த ஆட்டம் கண்டியில் நடந்தது.
முன்னதாக பாகிஸ்தான அணி கோல்டன் கிரவுண் என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தபோது, பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஹோட்டல் பெண் ஊழியரிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக தெரியவந்துள்ளது.
அறையை சுத்தம் செய்வதற்காக பெண் ஊழியர் பாகிஸ்தான் வீரர் தங்கி இருந்த அறைக்குள் சென்றபோது திடீரென தகாத முறையில் அந்த வீரர் நடந்து கொண்டதாகவும், இதனால் அந்த பெண் ஊழியர் பயத்தில் அலறி, உதவிக்காக சத்தம் போட்ட நிலையில், ஹோட்டல் ஊழியர்கள் விரைந்து வந்து அவரை காப்பாற்றியதாகவும் டெலிகாம் ஏசியா ஸ்போர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் வீரருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஓட்டல் நிர்வாகம் முடிவெடுத்த நிலையில், பாகிஸ்தான் அணியின் மேலாளர் நவைட் சீமா, வீரரில் செயலுக்காக ஹோட்டல் நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரியதால் ஹோட்டல் நிர்வாகம் மேல் நடவடிக்கையை கைவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சம்பந்தப்பட்ட பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரரின் இந்த செயலுக்காக அவருக்கு அணி நிர்வாகம் அபராதம் விதித்திருப்பதாகவும், நாடு திரும்பிய அந்த வீரரிடம் விளக்கம் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் வீரருக்கு தண்டனை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.இச்செயலில் ஈடுபட்ட அந்த வீரர் யார் என்ற விவரம் வெளியாகவில்லை..
20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆட்டத்திறனை வெளிப்படுத்த தவறிய பாகிஸ்தான் அணி ஒழுங்கீன செயல்களில் சிக்கி இருப்பதன் மூலம் சர்வதேச அளவில் அவமதிப்பை சந்திக்க நேர்ந்துள்ளது.
பாகிஸ்தான் ஷாகின்ஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது அந்நாட்டு வீரர் ஹைதர் அலி இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி விடுவிக்கப்பட்டார். அதேபோல மலேசியாவில் சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உதவியாளர்களில் ஒருவரான மலான் அலி என்பவர் பெண் ஓட்டல் ஊழியர் ஒருவரிடம் சில ஆண்டுகளுக்கு முன் சில்மிஷம் செய்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

