“ஈரான் முடிந்தது.. அடுத்து கியூபா!” – வெள்ளை மாளிகையில் டிரம்ப் அதிரடி முழக்கம்.. “3 நாட்களில் 24 கப்பல்களைத் தூக்கிட்டோம்” – ஈரானுக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை..!!
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் மீதான ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) போர் மிகவேகமாக முன்னேறி வருவதாகவும், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஈரானிடம் இப்போது விமானப்படை இல்லை, வான் பாதுகாப்பு அமைப்புகளும் இல்லை; அவர்களின் கடற்படை அடியோடு துடைத்து எறியப்பட்டுவிட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஈரானின் 24 போர்க்கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன” என அவர் அதிரடியாக அறிவித்தார். ஈரானியத் தலைவர்கள் இப்போது அமெரிக்காவைத் தொடர்பு கொண்டு சமாதானம் பேச விரும்புவதாகவும், ஆனால் அவர்கள் மிகவும் தாமதமாக வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
ஈரான் உடனான இந்த மோதல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்த டிரம்ப், அதன் பிறகு அமெரிக்காவின் முழுக் கவனமும் கியூபா பக்கம் திரும்பும் எனத் தெரிவித்தார். “முதலில் இதை (ஈரான் போர்) முடிக்க விரும்புகிறோம்; அதன் பிறகு கியூபா உடனான ஒப்பந்தங்கள் குறித்துப் பரிசீலிப்போம். கியூபா அரசு எங்களுடன் ஒப்பந்தம் செய்ய மிகவும் ஆவலாக உள்ளது,” எனக் கூறினார்.
மேலும், புளோரிடாவில் வசிக்கும் கியூபா வம்சாவளி அமெரிக்கர்கள் விரைவில் தங்கள் தாய்நாட்டிற்குச் சுதந்திரமாகச் சென்று வரும் காலம் வரும் என்றும் அவர் உறுதி அளித்தார். ஈரானைத் தொடர்ந்து கியூபா மீதான அமெரிக்காவின் இந்தத் திடீர் கவனம், சர்வதேச அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

