நட்பு நாடையே பதம் பார்த்த ஈரான்.. ஓமன் உட்பட 9 நாடுகள் மீது அதிபயங்கர தாக்குதல்.. | US, Israel – Iran War
Iran – அணு ஆயுத திட்டத்திற்கு எதிராகவும் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரான அயோத்துல்லா அலி காமேனியின் சர்வாதிகார ஆட்சியை கண்டித்தும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளியான இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் இரு நாடுகளும் சேர்ந்து ஈரானின் முக்கிய பகுதிகளை குறி வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரான காமேனி, பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜிஸ் நசீர் சாதே, ஈரான் புரட்சிகர ராணுவப்படை தளபதிகளான முகம்மது பக்பூர், செய்யது மஜீத் மவுசவி, தேசிய பாதுகாப்பு படை கவுன்சில் தலைவர் அலி சம்கானி உள்ளிட்ட 13 உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கூண்டோடு படுகொலை செய்யப்பட்டனர்.
உச்சபட்ச தலைவரான காமேனி வீட்டில் இவர்கள் அனைவரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்திய போது தக்க சமயம் பார்த்து அமெரிக்கா, ஈரான் வீசிய ஏவுகணை அந்த வீட்டை பதம் பார்த்தது.
எனினும் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்குப் பகுதியில் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்தும் ஈரான் ராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைகள். டிரோன் தாக்குதல்களை தீவிரமாக நடத்தி வருகிறது.
மத்திய கிழக்குப் பகுதிகளில் பஹ்ரைன், எகிப்து, ஈராக், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 நாடுகளில் அமெரிக்க ராணுவம் நிரந்தர பாதுகாப்பு முகாம்களை அமைத்துள்ளது. சிறியதும் பெரியதுமாக 19 இடங்களில் அமெரிக்க முகாம்கள் உள்ளன. இங்கு சுமார் 40,000 முதல் 50,000 அமெரிக்க வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டு, ஆயுதங்கள் குவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றைக் குறி வைத்து ஈரான் ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதுவரை ஈரான் ராணுவம், பஹ்ரைன், ஈராக், ஜோர்டன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதேபோல சைப்ரஸ் நாட்டில் உள்ள பிரிட்டன் ராணுவ மையம் ஒன்றின் மீதும் ஈரான் தாக்குதலை நடத்தி இருக்கிறது. அந்த வகையில் மொத்தம் 9 நாடுகளில் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஓமன் நாடு, ஈரானின் நட்பு நாடாக திகழ்ந்துவரும் நிலையில் அந்த நாட்டின் மீது ஈரான் குறி வைத்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஓமன் தான் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே சமரச பேச்சு நடத்தி வந்தது என்பது கவனிக்கத்தக்கது.
அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் 24 மாகாணங்களின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களில், இதுவரை சுமார் 800 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதேபோல ஈரான் நடத்திய தாக்குதலில் லெபனான் நாட்டில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தவிர்த்து கத்தாரில் 16 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 பேரும், ஓமனில் ஒருவரும், பஹ்ரைனில் ஒருவரும், குவைத்தில் 3 பேரும், ஈராக்கில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா ராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 18 பேர் காயமடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஈரான் ராணுவம் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தீவிரமாக நடத்தி வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் போன்றவற்றையும் ஈரான் குறி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்ற நிலை நிலவி வருகிறது.
இன்றும் 5வது நாளாக போர் நடந்து வரும் நிலையில் ஈரான் மீதான தாக்குதல் அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் எனவும் சமரச பேச்சுவார்த்தைக்கான காலம் கடந்து விட்டது எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஒரு நாளைக்கு சுமார் 7,000 கோடி ரூபாயை செலவிடுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

