இனி பேச்சுவார்த்தைக்கு நேரமில்லை’.. ஈரானின் முப்படைகளும், தலைமையும் காலி: ட்ரம்ப் பேச்சு

இனி பேச்சுவார்த்தைக்கு நேரமில்லை’.. ஈரானின் முப்படைகளும், தலைமையும் காலி: ட்ரம்ப் பேச்சு

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் புதிய அரசியல் தலைமை இப்போது பேச்சு வார்த்தைக்கு விரும்புவதாகவும் ஆனால் அதற்கு நேரம் கடந்துவிட்டது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானின் வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை மற்றும் அந்நாட்டின் தலைமைத்துவம் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என்று குறிப்பிட்டார். முன்னதாக, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் திட்டமிடப்பட்ட 4 முதல் 5 வார காலத்தை விடவும் அதிக காலம் நீடிக்க அமெரிக்காவிற்குத் திறன் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

‘நியூயார்க் போஸ்ட்’ இதழுக்கு அளித்த பேட்டியில், ஈரானுக்குள் அமெரிக்கத் தரைப்படையை அனுப்பும் வாய்ப்பை ட்ரம்ப் நிராகரிக்கவில்லை. மற்ற அதிபர்களைப் போல தரைப்படை அனுப்பப்பட மாட்டாது என்று நான் சொல்ல மாட்டேன். இப்போதைக்குத் தேவைப்படாமல் இருக்கலாம், ஆனால் தேவைப்பட்டால் நிச்சயம் அனுப்பப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இதுகுறித்து கூறுகையில், நாங்க என்ன செய்வோம் அல்லது செய்ய மாட்டோம் என்பதை முன்கூட்டியே அறிவிக்கும் முட்டாள்தனமான செயலில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபடாது என்று தெளிவுபடுத்தினார்.

ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகு, அந்நாட்டின் அரசியல் தலைமை பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார். அவர்கள் இப்போது பேச விரும்புகிறார்கள், நானும் அதற்குச் சம்மதித்துள்ளேன். ஆனால், அவர்கள் இதை முன்பே செய்திருக்க வேண்டும். மிக எளிதான தீர்வுகளை வழங்க அவர்கள் நீண்ட காலம் காத்திருந்துவிட்டனர் என்று ‘அட்லாண்டிக்’ இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் இதுகுறித்துப் பேசுகையில், ஈரானிய ஆட்சியின் மிக மூத்த தலைவர்கள் 49 பேர் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளைக் கொல்வது அமெரிக்காவிற்கு நல்லது என்று அவர் இந்தத் தாக்குதலை நியாயப்படுத்தினார்.

Recommended For You

About the Author: admin