‘ஆண்டவர்’ அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்தத் தடை!
கமல்ஹாசனின் பெயர் மற்றும் வசனங்களை டி-ஷர்ட்டுகளில் அச்சிட்டு விற்பனை செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. ஒரு கலைஞனின் உழைப்பும், அடையாளமும் அவரது அனுமதி இன்றி வணிகமாக்கப்படுவதைத் தடுக்கும் முக்கியத் தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது
சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ (Neeiye Vidai) என்ற தனியார் நிறுவனம், கமல்ஹாசனின் உருவம் மற்றும் அவரது படங்களில் இடம்பெற்ற உலகப்புகழ் பெற்ற வசனங்களைப் பொறித்த டி-ஷர்ட்டுகள் மற்றும் சட்டைகளை விற்பனை செய்து வந்தது.
தனது அனுமதி இன்றி, தனது அடையாளத்தை லாப நோக்கில் பயன்படுத்துவது தனது ‘ஆளுமை உரிமைக்கு’ (Personality Rights) எதிரானது எனக் கூறி கமல்ஹாசன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், அந்த நிறுவனம் கமல்ஹாசனின் அடையாளங்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்திருந்தது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது (நிறுவனம் சார்பில் யாரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து நீதிபதி ஆணையிட்டார்.
இந்தியாவில் இத்தகைய பாதுகாப்பைப் பெற்ற பிற முக்கிய பிரபலங்கள்
திரையுலகப் பிரபலங்கள்:
அமிதாப் பச்சன்: 2022-ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் இவரது பெயர், குரல் (தனித்துவமான ‘பாரிடோன்’ குரல்) மற்றும் உருவத்தைப் பயன்படுத்தத் தடை விதித்தது.
ரஜினிகாந்த்: 2015-ஆம் ஆண்டு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இவரது பெயர் மற்றும் ஸ்டைலை வணிக ரீதியாகப் பயன்படுத்தத் தடை விதித்தது.
அனில் கபூர்: இவரது புகழ்பெற்ற ‘ஜகாஸ்’ (Jhakaas) என்ற வசனம் மற்றும் அவரது உடல் அசைவுகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜாக்கி ஷெராப்: இவரது ‘பிடு’ (Bhidu) என்ற விளிப்புச் சொல்லையும் அடையாளத்தையும் பயன்படுத்தத் தடை உள்ளது.
ஐஸ்வர்யா ராய் பச்சன் & அபிஷேக் பச்சன்: சமீபத்தில் இவர்களது பெயரையும் புகழையும் தவறாகப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
காஜோல்: பிப்ரவரி 2026-ல் டெல்லி உயர் நீதிமன்றம் இவரது அடையாளங்களை AI மற்றும் டீப்ஃபேக் மூலம் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், நாகார்ஜுனா, ஆர். மாதவன் போன்றவா்களும் இத்தகைய சட்டப் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர்.
விளையாட்டு மற்றும் பிற துறையினர்:
மகேந்திர சிங் தோனி (MS Dhoni): தனது அனுமதியின்றி தனது பெயரையும் புகைப்படத்தையும் விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு எதிராகப் பாதுகாப்பு பெற்றுள்ளார்.
சுனில் கவாஸ்கர்: முன்னாள் கிரிக்கெட் வீரரான இவரும் தனது ஆளுமை உரிமையைப் பாதுகாப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆன்மீகத் தலைவரான இவரது பெயரையும் அடையாளத்தையும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜுபின் நௌடியல் (Jubin Nautiyal): பிரபல பாடகரான இவரது குரலைப் போலியாக உருவாக்கிப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது

